முன்னாள் குடியரசுத்தலைவர் பாரதரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 94ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ நண்பர்கள் குழு மற்றும்
டாக்டர் ஏ.பி. ஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை ஹவுஸ் ஆஃப் கலாம், இராமேஸ்வரம் சார்பில் நகராட்சி 2ஆம் நம்பர் பள்ளியில் மாணவர்களிடத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பு விழா,
இராமேஸ்வரம் விஸ்வகர்மா மஹாலில் நேற்று மாலை மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் இராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர் கே.இ. நாசர் கான் அவர்கள் தலைமை விருந்தினராகவும்,
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளையின் துணை நிறுவனரும் அப்துல் கலாம் அவர்களின் பேரனுமாகிய ஏ.பி.ஜே.எம்.ஜே ஷேக் சலீம் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஷேக் சலீம் இராமேஸ்வரம் நகரில் மாணவ மாணவியர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பயன்படும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தருமாறு தலைமை நகர்மன்ற தலைவர் நாசர் கானிடம் கோரிக்கை வைத்தார்.
தலைமையுரையாற்றிய நாசர் கான் விளையாட்டு மைதானத்திற்கான இடமாக சல்லிமலையில் பழைய ஹவுசிங் போர்டு அமைந்திருந்த இடத்தை ஒதுக்கித் தருவதாக அறிவித்தார்.
மேலும் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பள்ளி மாணவ மாணவியரும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், 94ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.