கஞ்சா கடத்தல் : 813 வங்கி கணக்குகள் முடக்கம்.- தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தகவல்.!

தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்.- தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தகவல்

தென் மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்திலில் ஈடுபட்டால் கடத்தல்காரர்கள் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என தென்மண்டல ஐஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களைக் கொண்ட காவல்துறை தென் மண்டல ஐஜியாக அஷ்ரா கார்க் நியமிக்கப்பட்டதிலிருந்து கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் பொருட்டு தனிப்படை மற்றும் வாகன சோதனையை தீவிரப்படுத்துதல் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில்  இந்த ஆண்டு மட்டும் கஞ்சா கடத்தல் தொடர்பான அறிக்கை ஒன்று தென்மண்டல ஐஜி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் 114 வழக்குகளில் 191 வங்கிக் கணக்குகளும், விருதுநகர் மாவட்டத்தில் 76 வழக்குகளில் 119 வங்கிக் கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 வழக்குகளில் 116 வங்கிக் கணக்குகளும், தேனியில் 81 வழக்குகளில் 146 வங்கிக் கணக்குகளும், ராமநாதபுரத்தில் 28 வழக்குகளில் 56 வங்கிக் கணக்குகளும், சிவகங்கையில் 12 வழக்குகளில் 16 வங்கிக் கணக்குகளும், நெல்லையில் 14 வழக்குகளில் 22 வங்கிக் கணக்குகளும், தென்காசியில் 11 வழக்குகளில் 20 வங்கிக் கணக்குகளும், தூத்துக்குடி  மாவட்டத்தில் 22 வழக்குகளில் 36 வங்கிக் கணக்குகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில்  59 வழக்குகளில் 91 வங்கிக் கணக்குகள் என தென் மண்டல காவல்துறையின் கீழ் செயல்படும் 10 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 494 வழக்குகளில் 813 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் தென்மண்டலத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட  90 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக மதுரை, தேனி, திண்டுக்கல் என மூன்று மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் மதுரை மாவட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலைய வழக்கில் சுமார் ரூ. 37 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் முடக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேடபட்டி காவல் நிலையத்தின் இரண்டு வழக்குகளில் சுமார் 59 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதுபோன்று திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி காவல்நிலைய வழக்கில் சுமார் ரூ.1.8 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், மயிலாடும்பாறை மற்றும் ஓடைப்பட்டி காவல்நிலையங்களின் வழக்குகளிலும் சுமார் ரூ. 23 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கம் செய்யப்படும் எனவும் தென் மண்டல ஐஜி அஷ்ரா கார்க் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காவல்துறையினர் மாநில எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.




Ahamed

Senior Journalist

Previous Post Next Post