நூல் விலை இன்று மேலும் 40 ரூபாய் உயர்ந்து 480 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. பின்னலாடை ஆர்டர்கள் இழப்பு மற்றும் பல கோடி இழப்பு ஏற்படும் என ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில் துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள்.
நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப் படுகிறது. நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வரு கிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் திருப்பூரில் நடந்தது. இருப்பினும் மாதந்தோறும் நூல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான(மே) நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளி யிட்டுள்ளன. அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.40 விலை உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பூரில் 440 ரூபாய் அளவில் விற்பனையாகி வந்த நூல் விலை இன்று மேலும் 40 ரூபாய் உயர்ந்து புதிய 480 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. பின்னலாடை ஆர்டர்கள் இழப்பு மற்றும் பல கோடி இழப்பு ஏற்படும் என ஏற்றுமதியாளர்கள் வேதனை. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.