மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளையும் மதுபானக் கூடங்களையும் மூடுவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் திருப்பூர் காந்தி நகரில் உள்ள மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான திருப்பூர் ரெஸ்டாரன்ட் என்ற மதுபான பாரில் கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதாக செய்தியாளர்களுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து திருப்பூர் நியூஸ்18 செய்தியாளர் பாலாஜி பாஸ்கர் அந்த மதுபான கூடத்திற்குச் சென்று கள்ளச்சந்தையில் மது விற்கப்படுவதை வீடியோ பதிவு செய்துள்ளார்.
அப்போது அங்கு இருந்த மதுபான கூட உரிமையாளர மற்றும் ஊழியர்கள் செய்தியாளர் பாலாஜி பாஸ்கரை தடுத்து வீடியோ எடுக்க கூடாது என்று கூறியுள்ளனர்.
அவர் தான் ஒரு செய்தியாளர் என்று அறிமுகப் படுத்திய பிறகும் வேண்டுமென்றே அவரை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி. பாபுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அனுப்பர்பாளையம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
செய்தியாளரை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் பாலாஜி பாஸ்கரிடம் புகாரைப் பெற்றுக்கொண்டு, அவர் மீது தாக்குதல் நடத்திக் கொலை மிரட்டல் விடுத்த ஆனந்தன் நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர் . 2 பேரை தேடி வருகிறார்கள்.
மேலும் மதுபானக் கூட உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுபான கூட உரிமையாளர்களின் இந்த அராஜக தாக்குதலுக்கு தமிழ்நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.