கர்நாடகத்தில் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் மீது கருப்பு மை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக தில்லியில் நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்த தலைவர்களில் ஒருவரான பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் நிகழ்ச்சியில் தலைவர் ராகேஷ் திகைத் பெங்களூருவில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மேடை அருகே வந்த ஒருவர் ராகேஷ் திகைத்தை அங்கிருந்த மைக்கை எடுத்து தாக்கினார். தொடர்ந்து வந்த மற்றொருவர் கருப்பு மை வீசினார்.
இதையடுத்து, அங்கிருந்த ராகேஷ் திகைத் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி அவர்களை மடக்கிப் பிடித்தனர். சம்பவத்தில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு அசாதரண சூழல் நிலவியது.
இதுகுறித்து ராகேஷ் திகைத் கூறுகையில், "இந்த நிகழ்விற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அரசுடன் கூட்டு சேர்ந்து தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது" என்றார்.