இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், மத்திய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விழாவிற்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரையில் வீரதீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த 319 காவல்துறையினருக்கு பதக்கங்கள் மற்றும் காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை உள்ளிட்ட காவலர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- "காவல்துறை மக்களோடு இணக்கமாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும். காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும். ஒரு காவலரோ, காவல் நிலையமோ தவறு செய்வதால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலைகுனிவு ஏற்படுகிறது. இந்த பதக்கங்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ள பெரும் அங்கீகாரம். காவல்துறை என்றாலே தண்டனை வழங்கும் துறையாக பார்க்கிறார்கள். காவல்துறை, குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்கும் துறையாக மாற வேண்டும். காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிலையை எந்த காவலரும் உருவாக்கி விடக்கூடாது. அரசியல், சாதி, மதம் காரணமாக வன்முறைகள் உருவாகாமல் தடுக்க வேண்டும்" என்று கூறினார்.