"2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி என்பதே இலக்கு - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஃபியோ தென் மண்டல ஏற்றுமதி சிறப்பு விருது (FIEO - Southern Region Export Excellence Award) வழங்கும் விழாவில், தென் மண்டலத்தில் சிறந்த செயல்திறன் கொண்ட ஏற்றுமதியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். 

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்தியாவில் ஏற்றுமதியில் 3-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இது ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே என் லட்சியம். இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பில் உள்ள 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்களில், 5 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விண்ணப்பித்துள்ளோம். 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி என்பதே இலக்கு. இதற்காக பல முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. மாவட்டம் வாரியாக ஏற்றுமதி மையம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி மிக மிக அவசியம். இந்தியாவின் ஏற்றுமதியில் தென்மண்டலம் 27 விழுக்காட்டுக்கு அதிகமாக பங்களிப்பை தருகிறது. 5 ஆண்டுகளுக்குள் இந்த பங்கு 35 விழுக்காட்டை தாண்டும் என்று நான் நம்புகிறேன்.

தென் மண்டலத்தில் ஏற்றுமதியில் சிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதில் பெருமை அடைகிறேன். ஏற்றுமதியில் தமிழ்நாடு இன்னும் பன்மடங்கு உயர முடியும். ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும். தனது துறையை கண்ணும் கருத்துமாக அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்துக் கொள்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், ஈஸ்வரன் எம்எல்ஏ., குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுனங்கள் துறை செயலாளர் அருண் ராய், எப்ஐஇஓ தலைவர் சக்திவேல், மண்டல தலைவர் இஸ்ரார் அகமது, துணை தலைவர் காலித்கான் பங்கேற்றனர்.



Ahamed

Senior Journalist

Previous Post Next Post