போதை பொருள் கடத்தல், கொலை, போக்சோ வழக்குகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 19 வழக்கறிஞர்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலியான மோட்டார் வாகன விபத்து இழப்பீடுகளை தயாரித்தது தொடர்பான புகார் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொடர்புடைய ஆதிகேசவன், சதிஷ்குமார் ஆகியோர் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எழிலரசன் மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் நதியா, தினேஷ் பாபு ஆகியோரும் எந்த நீதிமன்றங்களிலும் ஆஜராக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலினத்தவருக்கு எதிரான புகார் வழக்கில் முத்துராஜ் மற்றும் போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகையன் ஆகியோரும் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வேலை வாய்ப்பு மோசடி வழக்கில் குற்றச்சாட்ட பட்ட மனோகர் ரெட்டி, போலியாக ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டுகளில் பாரதி, செல்வி சங்கர் ஆகியோரும் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த19 வழக்கறிஞர்களில் நதியா, பாரதி, செல்வி உள்ளிட்ட 3 பெண் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.