அட்சய திருதியையொட்டி தமிழகம் முழுவதும் 18 டன் தங்கம் விற்பனை நடை பெற்றுள்ளதாகவும், இது எதிர்பார்த்ததைவிட கூடுதலாக விற்கப்பட்டதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் செல்லானி கூறியதாவது:
"அட்சயதிருதியை நாளில் அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணியை கடந்தும் நகைகளை வாங்க மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் வரை விற்பனை அதிகரித்திருந்தது" என்றார்.
இது குறித்து தங்க நகை கடை வியாபாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டைவிட பவுனுக்கு ரூ.2,400 கூடியிருந்தாலும், மக்கள் ஆர்வமுடன் நகைகளை வாங்கிச் சென்றனர். தமிழகம் முழுவதும் 17 டன் தங்கம் விற்பனையாகும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் 18 டன்னுக்கும் அதிகமாக விற்பனை நடைபெற்றது. அதன்படி, சுமார் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானது என்றனர்.