உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யா உக்ரேனிய தலைநகர் கீவ் மீதான தாக்குதலை கைவிட்டு, தொழில்துறை கிழக்குப் பகுதியான டான்பாஸைக் கைப்பற்றுவதில் முழுமையாக கவனம் செலுத்துகிறது. ரஷ்யர்கள் சைபர் யுத்தத்தில் மிகவும் பின்தங்கியிருந்தது, உக்ரேனியர்களுக்கு மிகவும் சாதகமாகவும், ரஷ்யர்களுக்கு பலத்த அடியாகவும் மாறியதாக மூத்த பத்திரிகையாளரும் புவிசார் அரசியல் நிபுணருமான ஃபரீத் ஜகாரியா இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்தியா டுடேயின் செய்தி இயக்குனர் ராகுல் கன்வாலிடம் பிரத்தியேகமாக பேசிய ஃபரீத் ஜகாரியா, "உக்ரேனிய எதிர்த்தாக்குதல் [அமெரிக்காவின் ஆதரவுடன்] அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைனியர்கள் அனைத்து ரஷ்ய சைபர் முயற்சிகளையும் முடக்கினர் மற்றும் ரஷ்யர்கள் சைபர் யுத்தத்தில் மிகவும் பின் தங்கியுள்ளனர் என்று கூறினார்.
இது குறித்து விளக்கிய ஃபரீத் ஜகரியா, "ரஷ்ய வீரர்கள் மொபைல் போன்களை போர் மண்டலங்களுக்குள் கொண்டு வந்தனர், உக்ரேனியர்கள் அந்த சிம் கார்டுகளை ஜாம் செய்துவிட்டனர். ரஷ்யர்கள் உக்ரைனிலிருந்து புதிய சிம் கார்டுகளை வாங்கினார்கள், இது உக்ரேனிய இராணுவம் அவர்களை துல்லியமாக குறிவைக்க உதவியது. அதனால்தான் ரஷ்யா 10 ஜெனரல்களை இழந்தது," என்று அவர் கூறினார்.
மேலும் "ரஷ்யா அதிநவீன ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தவில்லை, ஏனெனில் அது எல்லையை கடந்து தாக்கக் கூடும், இது நேட்டோவையும் அமெரிக்காவையும் நேரடியாக போரில் ஈடுபட தூண்டும்" என்றார்.