சித்திரை அமாவாசை மற்றும் வார விடுமுறையையொட்டி இன்று காலை முதல் ஆயிரகணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வெகு நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி பக்தர்கள் தரிசனம் செய்தனர். அமாவாசை தினத்தன்று அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி எள்ளு, பிண்டம் வைத்து தன்னுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் ஆத்மா சாந்தி
அடையும் என்பது ஐதீகம். இன்று சித்திரை அமாவாசை என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேற்று இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து தங்கி இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி அங்குள்ள புரோகிதர்களிடம் எள்ளு, பின்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து ராமநாதசுவாமி திருக்கோவிலில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடினர். இன்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து பக்தர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இன்று வார விடுமுறை என்பதால் தனுஷ்கோடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குவிந்துள்ளனர். தனுஷ்கோடி மற்றும் அக்னி தீர்த்த கடலில் குளிப்பவர்கள் ஆழமான பகுதிக்குச் செல்லாமல் இருக்க கடற்கரை ஓரங்களில் மெரைன் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடியதால் பாதுகாப்பு பணிக்காக ராமேஸ்வரம் திருக்கோயில் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா விதிமுறையை கடைப்பிடித்து முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள்
மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.