அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் படங்களை தயாரித்த டி.ராமாராவ் மரணம்
சென்னை தி.நகர் பாலாஜி அவென்யூ முதல் தெருவில் வசித்து வந்த ராமராவ் 93 வயதாகிய நிலையில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இறந்தார். இன்று மாலை 4 மணிக்கு கண்ணம்மாபேட்டை மயானத்தில் அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. இவருக்கு தாதினேனி ஜெயஸ்ரீ என்ற மனைவியும், சாமுண்டீஸ்வரி, நாக சுசீலா, அஜய் ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
ராமராவ் என்டிஆர், ஏஎன்ஆர், ஷோபன் பாபு, கிருஷ்ணா, பாலகிருஷ்ணா, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஜெயசுதா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியவர்.
தெலுங்கில் நவராத்திரி, ஜீவன தரங்கலு, பிரம்மச்சாரி, ஆலுமகளு, யமகோலா, பிரசிடெண்ட் காரி அப்பாயி, இல்லாலு, பண்டனி ஜீவிதம், பச்சனி காபுரம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
1979-ல் இந்தித் திரையுலகில் நுழைந்த அவர் அமிதாப் பச்சன், ஜீதேந்திரா, தர்மேந்திரா, சஞ்சய் தத், அனில் கபூர், கோவிந்தா, மிதுன் சக்ரவர்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்றினார். நடிகர் ரஜினிகாந்தை ’அந்தா கானூன்’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.