சென்னை அடுத்த மதுரவாயலில் தனது காரைத் தானே தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் எரித்து விட்டதாக நாடகமாடிய பாஜக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மதுரவாயல், கிருஷ்ணா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 48). பா.ஜனதா கட்சி பிரமுகர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவரது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது.
காரை மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த மதுரவாயல் போலீசார், கட்சி ரீதியாக ஏதேனும் முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் திருவள்ளூர் மேற்கு பாஜக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் காரை அவரே தீ வைத்து கொளுத்திவிட்டு நாடகமாடிய சம்பவம் தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியானது.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில், சதீஷ்குமாரே காரைத் தீவைத்து எரித்துவிட்டுப் பிறர் எரித்ததாக நாடகமாடியது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்ட நிலையில் காரை விற்று நகை வாங்கித் தரும்படி மனைவி தொடர்ந்து தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் காரை எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அவரை 2 பிரிவுகளின் கீழ் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும், வருங்காலங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபடக்கூடாது என பாஜக நிர்வாகியிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.