தாளவாடி அருகே சாலையை அகலப்படுத்த கோரி மதிமுகவினர் சாலை மறியல் செய்ய முயற்சி - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் முதல் கும்பாரகுண்டி வரை செல்லும் சாலையை அகலப்படுத்த கோரி மதிமுகவினர் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் உள்ள தமிழக கர்நாடக எல்லையில் இருந்து கும்பாரகுண்டி வரை செல்லும் சாலை அகலம் குறைவாக உள்ளது. இதனால் தாளவாடியில் இருந்து காய்கறி ஏற்றி செல்லும் வாகனங்கள், மற்ற சரக்கு வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமலும்,மழைக்காலங்களில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டும் வருகிறது இந்த நிலையில் அந்த சாலையை அகலப்படுத்த கோரி விவசாயிகள் பலமுறை நெடுஞ்சாலைத் துறையினருக்கு புகார் அளித்தனர். ஆனால் சாலையை அகலப்படுத்த வனத்துறையினர் அனுமதி தரவில்லை எனவும்,அதனால் அங்கு சாலை பணியை மேற்கொள்ள முடியவில்லை என நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கும்டாபுரம் முதல் கு்பாரகுண்டி வரை செல்லும் சாலையை அகலப்படுத்த வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தாளவாடி மதிமுக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி தலைமையில் 10 க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் செய்ய முயன்றனர் . இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் தாளவாடி காவல் ஆய்வாளர் அன்பரசு மற்றும் துணை வட்டாட்சியர் ஜெகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மாதத்தில் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காணப்படும் என அவர்கள் கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Previous Post Next Post