கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (29-4-2022) முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, அங்குள்ள மக்களுக்கு உருவாகி வரும் தீவிர நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும்.
இது தொடர்பாக, 31-3-2022 அன்று தான் ஏற்கெனவே அளித்த கோரிக்கை மனுவின்மூலம், இப்பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், இலங்கையில் வாடும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை வழங்குவதற்குத் தமிழக அரசு தயாராக உள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்ததாகவும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 15-4-2022 அன்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தான் எழுதிய கடிதத்திலும், அவருடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போதும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்ததோடு, இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான பொருட்களையும், உதவிகளையும் வழங்குவதற்கு ஒன்றிய அரசின் அனுமதியைக் கோரியிருந்ததாகவும், ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்குக் கிடைக்கப்பெறவில்லை என்றும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இலங்கையில் நிலவும் அமைதியின்மை மற்றும் மக்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்கள் குறித்த செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, அத்தியாவசிப் பொருட்களையும், உயிர் காக்கும் மருந்துகளையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்பிட தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டுமென்று தமிழக சட்டமன்றப் பேரவை இன்று (29-4-2022) ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள விபரத்தை முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றுவதற்கு முன்னர் நடைபெற்ற விவாதத்தின்போது, அவையில் இடம்பெற்றுள்ள அனைத்துச் சட்டப்பேரவைக் கட்சிகளும், இலங்கையில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இவ்விஷயத்தில் மேலும் தாமதிக்காமல் உரிய நேரத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டியதன் அவசியம் குறித்து தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தின என்றும் முதல்வர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுகளை தான் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், தமிழகத்திலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை விரைவாக எடுத்துச் செல்வதற்கு உரிய அனுமதிகளை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உடனடியாக வழங்கிடுமாறு கோரியுள்ளதோடு, தமிழக சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் இந்தியப் பிரதமரின் மேலான கவனத்திற்கு இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.