திருச்சி மணிகண்டம் அருகே நாகமங்கலம் யாகப்புடையான்பட்டியில் சிலர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு போலி மதுபான ஆலை நடத்தி வருவதாகத் தமிழக சிஐயூ பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையிலான போலீசார் அங்கு சென்று அந்த வீட்டுக்குள் புகுந்து அதிரடியாகச் சோதனை நடத்தினர்.
அங்கு சுமார் 1,500 மது பாட்டில்கள், மூன்று பேரல்களில் அடைக்கப்பட்டிருந்த 150 லிட்டர் மதுபானம், 20 கேன்களில் எரிசாராயம், 50 ஆயிரம் பாட்டில் மூடிகள், போலி லேபிள்கள், எந்திரம் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இருந்தன. உடனே இது குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராபாய் தலைமையிலான போலீசார் அங்கு வந்து போலி மதுபான ஆலையில் இருந்த அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அங்கிருந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் இந்த சம்பவத்தில் சரியான முறையில் முன்கூட்டியே தகவல்களைச் சேகரிக்காமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராபாய், மணிகண்டம் தனிப்பிரிவு காவலர் சுரேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி டி.ஐ.ஜி சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, திருச்சியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மது அருந்துவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சோதனை நடத்தி போலி மது பாட்டில்கள் ஏதேனும் உள்ளனவா என கண்டறிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.