தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு மத்திய இணை அமைச்சர் முருகன், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் 2ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பக்தர்கள் பங்கேற்புடன் கோலகலமாக நடைபெற்றது. தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள்
உடனுறை அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா மிக எளிமையாக பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடைபெற்றது.
இந்நிலையில் நடப்பாண்டில் சித்திரைத் திருவிழா கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. முன்னதாக காலை 7 மணிக்கு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள்
அருள்மிகு ஸ்ரீசங்கரராமேஸ்வரர் மற்றும் விநாயகர் - முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப்பெருமானும், பெரிய தேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எளுந்தருளினர்.
தேரோட்டத்தை மத்திய இணை அமைச்சர் முருகன், அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில் இணை ஆணையர் அன்புமணி, ஆகியோர் தொடங்கி வைத்தனர். தேர் முன்பாக ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம்,
பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளும், ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தப்பாட்டம் இசை ஒலிக்க கோலாகலமாக நடைபெற்றது. மேலும், வான வேடிக்கை தொண்டர்களின் சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் தேரோட்டம் நடைபெற்றது.
தேர் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.