திருப்பூர் மாநகராட்சி 42வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில், அந்த வார்டுக்கு உட்பட்ட கே. வி.ஆர் நகர், ஜீவா நகர் பகுதி பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி மேயர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் கடந்த 35 வருடங்களாக ஜீவா நகர், கே.வி.ஆர்.நகர், அண்ணா நகர், முத்துமாரியம்மன் கோவில் வீதி பகுதியில் 450-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். மேற்படி எங்கள் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்குண்டான வரியையும், மின் இணைப்புகளுக்குண்டான மின் கட்டணத் தொகை மற்றும் வைப்பீடுத் தொகையையும் தவறாமல் செலுத்தி வருகிறோம்.
கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் எந்தவித மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்படவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு திருப்பூர் மாநகரம் வெள்ளத்தால் சூழ்ந்த போதும் எங்கள் பகுதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நாங்கள் எவ்வகையிலும் அரசிடமிருந்து நிவாரணம் பெறவில்லை. எங்கள் பகுதிக்கு வரும் வாய்க்கால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் முன்பே துண்டிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறமுள்ள ஓடையில் கலந்து சென்று விடுகிறது.
ஆகவே எங்கள் பகுதி எந்தவிதமான மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட கூடிய வாய்ப்பு இல்லை. இதை நாங்கள் கடந்த அரசிடம் வலியுறுத்தி எங்கள் பகுதியை வகை மாற்றம் செய்து தர ஏற்பாடு செய்யக் கோரி அந்தப் பணியும் நடந்து கொண்டிருந்தது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தாங்கள் அந்த பணியை தொடர்ந்து செய்து எங்கள் பகுதியை வகை மாற்றம் செய்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அங்கேயே தொடர்ந்து வசிக்க ஆவண செய்து தர வேண்டும் என்று கூறி உள்ளனர்.மே
மேலும் அங்கு நோட்டீஸ் வழங்குவதற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக பணிகளை செய்வதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேயரிடம் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் பேசிய மேயர் தினேஷ் குமார், சட்டப்படியான வாய்ப்புகளைப் பொறுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.