மாணவர்களுக்குச் சத்துணவு, சீருடை, காலணி, மிதிவண்டி... உள்ளிட்ட பல விலையில்லாப் பொருள்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினியும் வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணமும் கிடையாது. இத்தனை சலுகைகள் இருந்தும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது.
கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்தின் அரசுப் பள்ளிகளிலிருந்து 2 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளியேறியுள்ளனர். ஏன் இந்த நிலை? அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்கள் என்ன? இதுகுறித்து அங்குள்ள பொதுமக்கள் கூறியதாவது...
உடுமலையிலுள்ள இந்த நகராட்சி தொடக்கப்பள்ளியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வரை ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர். பஸ் நிலையம் அருகிலுள்ள விபிபுரம் குடியிருப்புப் பகுதியிலுள்ள 400 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த பள்ளியே கைகொடுத்து வந்தது. ஆனால் பஸ் நிலையம் விரிவாக்கத்துக்காக விபிபுரத்திலுள்ள வீடுகள் மாரியம்மாள் நகருக்கு மாற்றப்பட்ட போது ஒட்டுமொத்தமாக பள்ளியின் மாணவர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
இதன் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம் தொடங்கப்பட்டது. அத்துடன் பள்ளியின் நுழைவாயிலை ஒட்டி தள்ளு வண்டிகள் ஆக்கிரமிப்பால் பள்ளியே வெளியே தெரியாத நிலை உள்ளது.
இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதில் பெற்றோருக்கு தயக்கம் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் இந்த பகுதியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் பெரும்பாலும் வணிக நிறுவனங்களே உள்ளது. இருக்கும் கொஞ்சநஞ்சம் வீடுகளிலும் பணக்காரர்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினரே குடியிருக்கின்றனர். இவர்களுடைய குழந்தைகளும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் படிப்பதையே விரும்புகின்றனர் என்றனர்
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில்..
''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு மூன்று காரணங்களை முதன்மையாகச் சொல்லலாம். தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் கட்டடம், மைதானம், கழிவறை, ஆய்வுக்கூடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சிறப்பாகவே இருந்தாலும், அவற்றை சுகாதாரமாகப் பராமரிப்பதில் தொடர் கண்காணிப்பு இல்லை. ஆள்களை நியமிப்பதிலும் முழுமை இல்லை. இது, முதல் காரணம்.
இரண்டாவது காரணம், கலை சார்ந்து கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை. நகரின் மையத்தில் ஓர் அரசுப் பள்ளி இருக்கும். மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் இருக்கும். ஆனால், உடற்கல்வி ஆசிரியர் பணி நிரப்பப்படாமல் இருக்கும். இதனைச் சரிசெய்வது மிகவும் முக்கியமானது.
மூன்றாவது காரணம், பெற்றோர், ஆசிரியர், மாணவர் மூவருக்குமான உறவுச் சங்கிலி இல்லை. தனியார் பள்ளிகளில் அடிக்கடி பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புகள் நடத்தப்பட்டு, மாணவர் குறித்த செய்திகளை அவ்வப்போது பகிர்ந்துகொள்கின்றனர். அதுபோன்ற சந்திப்புகள், அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் நடப்பதில்லை. (விதிவிலக்காக சில பள்ளிகளில் நடத்தப்படலாம்) பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு என்பது, மாணவரின் கல்வி பற்றிய தகவல் பரிமாற்றமாக மட்டுமின்றி, அந்தப் பள்ளியைக் குறித்த உரையாடலாகவும் மாறும். அப்படி மாறும்பட்சத்தில், வளர்ச்சி சார்ந்த செயல்பாட்டை நோக்கி பள்ளியும் நகரும். இவை முறையாக நடைபெறும்பட்சத்தில், பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு உண்டாகும். எனவே, இவற்றைச் சரிசெய்ய வேண்டும்.''
"ஒரு பள்ளியில் மாணவரைச் சேர்க்கும் முடிவை, அந்த மாணவரின் பெற்றோர் எடுத்தாலும், சமூகச் சூழலும் அந்த முடிவை எடுக்கவைக்கிறது. மிக எளியப் பொருளாதார குடும்பத்தில் வசிப்போரும், தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கவே நினைக்கின்றனர். தனியார் பள்ளியில் தன் பிள்ளை படிப்பது சமூக அந்தஸ்து என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது. பல பகுதியில் பார்த்தவரை, ஆங்கிலம் படிப்பதற்கு என்று மட்டுமின்றி, கெளரவத்துக்காகத் தனியார் பள்ளியை நோக்கிச் செல்லும் பெற்றோர் எண்ணிக்கையே அதிகம் " என்கின்றனர் கல்வியாளர்கள்.
உடுமலை நகராட்சி தொடக்கப்பள்ளியில், தற்போது முகம்மது ஆதில் என்ற ஒரே ஒரு மாணவர் மட்டுமே 5 -ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்காக தலைமை ஆசிரியர் ஒருவரும் பணியில் உள்ளார். முகம்மது ஆதில் இந்த ஆண்டோடு பள்ளியைவிட்டு வெளியேறும் நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களே இல்லாத நிலை உள்ளது. இதனால் பள்ளி மூடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.