பொருட்கள் விலை உயர்வுக்கு வியாபாரிகள் காரணமல்ல - விக்கிரமராஜா பேட்டி


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று கோவில்பட்டியில் நடந்தது. மண்டல தலைவர் எம்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் எஸ்.பி.எம்.ராஜா, மாநில இணை செயலாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் எஸ்.பி.கே.பன்னீர் செல்வம் வரவேற்றார்.கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

இதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவராக அசோகன், செயலாளராக  ஜேசுராஜா, பொருளாளராக எஸ்.டி.கண்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளராக ஏ.கார்த்தீஸ்வரன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.


தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, வணிகர் தின 39-வது மாநில மாநாடு மே 5-ம் தேதி திருச்சியில் நடக்கிறது. இதில், 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது பேரமைப்பின் திருப்புமுனை, வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய மாநாடாக அமையும். இந்த மாநில மாநாட்டில் முதன் முறையாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். 

புகையிலை பிரச்சினையில், சட்டம் இயற்றப்பட்ட உடன் கடைகளை தான் அதிகாரிகள் சீல் வைக்க வருகின்றனர். அந்த புகையிலை பொருட்கள் எங்கு வருகிறது. எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை அங்கு தடை செய்வது விட்டுவிடுகிறார்கள். 10 பேரிடம் சோதிப்பதை விட்டு, 10 ஆயிரம் பேரை சோதிக்க வருகின்றனர். ஆனால், தடை செய்யப்பட்ட எந்த பொருளையும் விற்பனை செய்யக்கூடாது என்பதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெளிவாக உள்ளது. தனிப்பட்ட கடைகளுக்கு சீல் வைப்பதால், அந்த வியாபாரியின் குடும்பம் தான் பாதிக்கப்படும். இதனால் இந்த அரசுக்கு அப்படிப்பட்ட அவப்பெயர் ஏற்படுத்திவிடாக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

எங்களுக்கு அறநிலையத்துறை மற்றும் உள்ளாட்சி துறைகளுக்கு உட்பட்ட கடை வாடகை பிரச்சினை  என போன்ற பிரச்சினைகள் உள்ளன. மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தான் சீல் வைக்க வேண்டும். சாமானிய வியாபாரிகள் கடைகளை சீல் வைக்கக்கூடாது என வலியுறுத்துகிறோம். வியாபாரிகளும் தடை செய்யப்பட்ட பொருட்களையும் வாங்கி விற்பனை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். 

விலைவாசி உயர்வுக்கு நாங்கள் காரணமில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடிகளில் கடுமையான விலை ஏற்றம். இவையெல்லாம் சேர்ந்து தான் பொருட்களின் விலையில் வரும். விலை ஏற்றத்துக்கும் வியாபாரிகளுக்கும் சம்பந்தமில்லை. பெரிய கார்பரேட் நிறுவனங்கள் உள்ளே புகுந்து சில்லரை வர்த்தகத்தை ஒட்டுமொத்தமாக கைப்பற்றும் சூழ்ச்சி நடந்து கொண்டுள்ளது. அதனை முறியடிப்பதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

கலப்படக்காரர்களுக்கு நாங்கள் என்றும் துணைபோவது இல்லை. கலப்படம் செய்து, அதனை வியாபாரத்துக்கு அனுமதித்தால் அது முழுமையான குற்றம். கலப்படம் குறித்து வியாபாரிகளுக்கு தெரிவதில்லை. அவர்கள் பொருட்களை ஆய்வு செய்து வாங்கி விற்பனை செய்வதில்லை. அதனால் கலப்படம் செய்து பொருட்களை உற்பத்தி செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வருகிறோம், என்றார் அவர்.

Previous Post Next Post