பாவபுண்ணிய கணக்கெழுதும் சித்திரகுப்த நாயனார் பொங்கல் விழா

 மண்ணுலகில் பிறக்கும் மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதி, அவர்களுக்கான பலன்களை அளிக்க வழிவகை செய்பவர் தான் சித்திரகுப்தர். சித்திரபுத்திர நாயனார் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் ஸ்ரீசித்திர குப்தர் கோவில் பிரசித்தி பெற்றது. உலகிலேயே காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் சித்திரகுப்தர் கோவில் உள்ளது. 

சித்ரா பவுர்ணமி நாள் சித்திரகுப்தரின் பிறந்தநாளாக கருதப்படுவதால், ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி நாளிலும், சின்னாண்டிபாளையத்தில் உள்ள சித்திரகுப்தருக்கு பட்டு வேஷ்டி, தலைப்பாகை அணிவித்து, பல நூறு வகை பலகாரங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.  

அந்த வகையில் இந்தாண்டு சித்திரகுப்தர் பொங்கல் விழா தொடங்கியது. நேற்று  மாலை  மங்கள இசையுடன் சித்திரகுப்தர் உற்சவர் திருவீதியுலா, பால்குடம் ஊர்வலம், அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. 

இன்று காலை  ஸ்ரீகணபதி ஹோமம், சித்திரகுப்தர் சிறப்பு பூஜை, யாகபூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சித்திரகுப்தருக்கு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.  

காலை 10:30 மணிக்கு சித்திரகுப்தருக்கு 16 வகையான திரவியங்களால், அபிஷேகம் மற்றும் புனித கலசநீர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தனர். 

காலை, 11:40 மணிக்கு, கூனம்பட்டி ஆதீனம், நடராஜ சுவாமி அருளாசி வழங்கினார் தொடர்ந்து 12 மணிக்கு பட்டு வஸ்திரம் தலைப்பாகையுடன் அருள்பாலித்த சித்திரகுப்தருக்கு 100க்கும் மேற்ப்பட்ட வகையான பலகாரங்கள் படைக்கப்பட்டு படையல் வழிபாடு நடைபெற்றது.  தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

காலை முதலே அன்னதானம் நடந்து வருவதால் சாமிதரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அறுசுவை உணவு சாப்பிட்டு வருகிறார்கள். 
சித்திரை மாதம் பிறந்தவர்கள், ஸ்ரீசித்திர குப்தர் கோவிலில், பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். சித்திர குப்தரை வழிபட்டால், கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். 


கொரோனா ஊரடங்கால், கடந்த 2 ஆண்டுகளாக, சித்ரா பவுர்ணமி விழா எளிமையாக நடந்தது. இந்தாண்டு, கோலாகலமாக கொண்டாட சித்திர குப்தர் ஆலய விழாக் குழு, மாதபவுர்ணமி பூஜை குழுவினர் ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
Previous Post Next Post