இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் பேத்தி ஸ்மிர்த்தி மற்றும் அவரது தோழி மகதி ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று மாலை நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு ஸ்மிர்த்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். மேலும், ஸ்மிர்த்தி எழுதிய புத்தகத்தை வெளியிட்டார். அதனை தொடர்ந்து தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை கவர்னர் தமிழிசை பேசியதாவது:கலாசாரம், பண்பாடு போன்றவற்றை குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். கல்வி மட்டுமே நம்மை முன்னேற்றி விடாது. கலையும் தேவை. படிப்பு குழந்தைகளை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றாலும், படிப்புடன் மேலும் ஒரு நடனமோ, இசையோ, ஓவியமோ உள்ளிட்ட கலையை கற்றுக்கொள்ளும் போது அவர்களின் வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்கும். ஆக கலை என்பது நாம் ரசிப்பது மட்டுமல்லாமல் நமது வாழ்க்கையின் மகிழ்ச்சி கலையாமல் இருப்பதற்கும் கலை நமக்கு உதவி செய்கிறது.கலை கற்கும் போது அதிக ஈடுபாடு வேண்டும். தமிழுக்கு யாரெல்லாம் மரியாதை கொடுக்கிறார்களோ? அவர்களை தமிழ் வாழ வைக்கும். நமது கலாசாரம், கலை பாதுகாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு எந்த சமூகம் மரியாதை கொடுக்கிறதோ? அந்த சமூகம் தான் வளர்ச்சியடையும என கூறினார். மேலும், நிகழ்ச்சியில் மேகாலயா மாநிலத்தின் முன்னாள் கவர்னர் சண்முகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.