தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான அரசு புறம்போக்கு இடங்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஆய்வு மேற்கொண்டார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் சிறு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக தருவைக்குளம் கடற்கரை பகுதியில் மாவட்ட ஆட்சியர்செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத்துறை பயன்பாட்டிற்காக கீழஅரசரடி மற்றும் முள்ளக்காடு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு புறம்போக்கு நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசு உப்புத் துறைக்கு பாத்தியப்பட்ட மினி சகாயபுரம், ஊரணி ஒத்தவீடு, சி.ஜி.இ. காலனி ஆகிய இடங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்கள் தங்களுக்கு பட்டா வழங்கும்படி விண்ணப்பித்து இருந்தனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர், அப்பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், வருவாய் கோட்டாட்சியர்கள் சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), சங்கர நாராயணன்(கோவில்பட்டி), வட்டாட்சியர்கள் நிஷாந்தினி (ஓட்டப்பிடாரம்), ஜஸ்டின் (தூத்துக்குடி) மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.