தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் புன்னக்காயல் ஊராட்சி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு தெரிவிக்கையில்,
தமிழக முதலமைச்சர் கடந்த 24.04.2022 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட ஆணையிட்டிருந்தார்
அதனடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் புன்னக்காயல் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கோரிக்கை மனுக்கள் வழங்கியுள்ளீர்கள்.
உங்கள் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் புன்னக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இங்கு பொதுமக்களாகிய நீங்கள் நீண்ட காலமாக சாலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை சீரமைத்து தரும்படி கோரிக்கை வைத்துள்ளீர்கள். மேலும் இப்பகுதியில் அதிக அளவு விபத்துகள் ஏற்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களும் தெரிவித்துள்ளார்கள்.
இங்குள்ள சாலையை சீரமைப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளதை தெரிவித்துக்கொள்வதோடு மேலும் விரைவில் இங்கு போக்குவரத்து அலுவலர் வாயிலாக ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாத ஊராட்சியாக திகழ ஒத்துழைக்க வேண்டும். புன்னக்காயல் கிராமத்தில் நிரந்தர குடிநீர் வசதி வேண்டி கோரிக்கை வைத்துள்ளீர்கள். நமக்கு நாமே திட்டத்தின் மூலம் குடிநீர் பிரச்சனையை தீர்த்து அனைவருக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புன்னக்காயல் ஊராட்சியில் கூடுதல் குடிநீர் திட்டத்தில் ரூ.1.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
மேலும் புன்னக்காயல் பகுதியில் ஆலை கழிவினால் காற்று மாசு ஏற்பட்டு அதிக நபர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கோரிக்கை வைத்துள்ளீர்கள். நான் ஒரு மருத்துவராக கூறுகிறேன். ஆலை கழிவினாலும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் ஏற்படும்.
பொதுவாகவே 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பல நோய்கள் உருவாகும். குறிப்பாக மலேரியா, காசநோய் உள்ளிட்ட இணை நோய்கள் ஏற்படுவதினாலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தற்போது மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் நோய்களை கண்டறிந்து அதற்கேற்ற மருத்துவம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே புன்னக்காயல் ஊராட்சியில் விரைவில் மருத்துவ முகாம் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளிலும் வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதோடு பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. .
புன்னக்காயல் ஊராட்சியில் 87 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 7 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பட்டாக்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 800 நபர்களுக்கு 2 மாத காலத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்களில் 4 பேர் காயலில் விழுந்து உயிருக்கு போராடியபோது புன்னக்காயல் பகுதியை சேர்ந்த ஜேமன் என்பவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது உயிருக்கு போராடிய 4 பேரை காப்பாற்றினார்.
இச்செயலை அறிந்தவுடன் நான் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தேன். அது மட்டுமல்லாமல் வீர தீர சாகசம் செய்தமைக்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் வீர தீர செயல் புரிந்தமைக்கான விருது வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் விஸ்வ லிங்கம்,செந்தூர்பாண்டி (பராமரிப்பு), மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, வட்டாட்சியர் முருகேசன், புன்னக்காயல் ஊராட்சி மன்ற தலைவர் சோபியா, ஊர் பஞ்சாயத்து தலைவர் அமலிசன், துறைமுக கமிட்டி தலைவர் நாதன், அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.