திருப்பூர் புத்தக கண்காட்சி கோலாகல தொடக்கம்: மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ., க.செல்வராஜ் பங்கேற்பு

 18வது புத்தகத் திருவிழா திருப்பூரில் தொடங்கியது.‌ 11 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை திருப்பூர் மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ.,க.செல்வராஜ், உள்ளிட்டோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். 

திருப்பூர் கே.ஆர்.சி சிட்டி சென்டர் வளாகத்தில் புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 95 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த கண்காட்சியில் சாகித்ய அகாடமி, பாரதி, உயிர்மை, விகடன், கிழக்கு, எதிர், என்சிபிஎச், தமிழினி, நற்றிணை, வம்சி, ஆழ்வார்கள் ஆய்வு மையம் உள்ளிட்ட 36 புத்தகப் பதிப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் என 94 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கதை, கவிதை,  நாவல், நாடகம், அறிவியல், அரசியல், சமூகம், தத்துவம், வரலாறு, உளவியல், சிறுவர் இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. புத்தகங்கள் வாங்கும் அனைவருக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை நடைபெற்ற விழாவில்  திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் ரிப்பன் வெட்டி கண்காட்சியை துவக்கி வைத்தார்.

மாநகர மேயர் ந. தினேஷ்குமார் முதல் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். முதல் நாளிலேயே நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டனர்.

திறப்பு விழா நிகழ்வுக்கு வரவேற்புக் குழுத் தலைவர் வழக்கறிஞர் பி மோகன் தலைமை ஏற்றார். பாரதி புத்தகாலயம் மேலாளர் நாகராஜ் வரவேற்றார். முதல் புத்தக விற்பனையை மேயர் தினேஷ் குமார் துவக்கி வைக்க துணை மேயர் பாலசுப்ரமணியம் பெற்றுக்கொண்டார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் துணைத் தலைவர் மைகோ வேலுச்சாமி, டீமா சங்கத் தலைவர் எம். பி. முத்துரத்தினம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

துணை மேயர் பாலசுப்பிரமணியம், மேயர் ந.தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் ஆகியோர் பேசினர். நிறைவாக வரவேற்புக் குழு செயலாளர் ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.

Previous Post Next Post