18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவ, மாணவிகளுக்கானகலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அலை, அலையாக பல்லாயிரக்ககணக்கில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து 18ஆவது புத்தகத் திருவிழாவை ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 11 நாட்கள் நடத்துகின்றனர். ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு கலை இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்படும். இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் பல்லாயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் பங்கேற்பார்கள். எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக புத்தகத் திருவிழா நடத்தப்படவில்லை. எனவே மாணவர்களுக்கான கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகளும் நடைபெறவில்லை. இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா அறிவிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை திறனாய்வு போட்டிகள் ஐந்து மையங்களில் நடத்தப்பட்டன.
திருப்பூர் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம், இடுவாய் ஊராட்சி சின்னக்காளிபாளையத்தில் உள்ள சின்னம்மன் திருமண மண்டபம், திருப்பூர் குமார் நகரில் உள்ள கருப்பராயசாமி கல்யாண மண்டபம், பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஸ்ரீ செல்வம் மஹால், நல்லூர் பழைய சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் சோளியம்மன் திருமண மண்டபம் ஆகிய ஐந்து மையங்களில் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன.ஓவியம், கட்டுரை, கவிதை ஆகிய வகைகளில் 1 முதல் 5 வகுப்புகள் வரை, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றும் 9 முதல் 12 மணி வரை என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடத்தப்பட்டன. எனினும் அனைத்து மையங்களிலும் காலை 9 மணி முதலே பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் போட்டி நடைபெறும் மண்டபங்களுக்கு ஆர்வமுடன் படையெடுத்தனர். திருப்பூர் புத்தகத் திருவிழா வரவேற்புக்குழுத் தலைவர் பி.மோகன், செயலாளர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் எஸ்.சுப்பிரமணியன், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவர் கே.கணேசன் உள்பட வரவேற்புக்குழு நிர்வாகிகள் இந்த மையங்களில் போட்டிகளைத் தொடக்கி வைத்தனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் யுனிவர்சல் பள்ளி ஆசிரியர்கள், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர், அறிவியல் இயக்கத்தினர் உள்பட புத்தகத் திருவிழா வரவேற்புக்குழு உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக செயல்பட்டு இப்போட்டி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் ஓவியங்கள் வரைந்தும், கவிதை, கட்டுரைகள் எழுதியும் ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்தனர். இதில் ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த போட்டியை நடத்த உதவி செய்த 5 திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களாக பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கும் வரவேற்புக் குழுவினர் நன்றி தெரிவித்தனர். இப்போட்டிகளில் பங்கேற்றோரில் வெற்றி பெற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகத் திருவிழா கண்காட்சியில் 19ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறும். அத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். புத்தகத் திருவிழாவுக்கு வருகை தரும் மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் 10 பேருக்கு தலா ரூ.500 மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது என்றும் வரவேற்புக்குழுத் தலைவர் பி.மோகன் தெரிவித்தார்.