ஆட்சியில் தலையிட்ட ஆளுநர்களை ஓட விட்ட பெண் முதலமைச்சர்கள் - ஜெயலலிதா சென்னா ரெட்டியை எப்படி ஓட விட்டார் தெரியுமா?

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஆட்சியில் தலையிட்ட ஆளுநர் சென்னா ரெட்டிக்கு எப்படி எதிர்ப்பு காட்டப்பட்டது, மேற்கு வங்கத்தில் ஆளுனர் ஜெகதீப் தங்காரை மம்தா பானர்ஜி எப்படி அடக்கினார் என்பதை எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் சற்று திரும்பி பார்க்க வேண்டும். 

ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான், ஆட்சியில் அதிகாரம் செலுத்த மக்களால் நியமிக்கப்பட்டவர்கள், பல கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால் ஆன சட்டசபை நிறைவேற்றும் தீர்மானங்களை, சட்ட முன்வடிவுகளை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் இருப்பதும், அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்துவதும், பதவிக் காலம் முடிந்த துணை வேந்தர்களுக்கு மாற்றாக அரசு அனுப்பும் பட்டியலை புறக்கணித்து , துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு தருவதும் , அப்பட்டமான ஜனநாயக மீறல். இதன் மூலம் மாநில அரசுக்கான அதிகாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இரு தினங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை. மாண்புமிகு ஆளுநர் பழகுவதற்கு இனியவர்.ஆளுநருடன் சுமூக உறவு உள்ளது. ஆட்சி நடத்தும் விதத்தை ஆளுநர் பாராட்டியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது முறையல்ல. இது சட்டமன்ற மாண்பை குறைக்கும் செயல்,என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், இந்தச் சட்டமன்றத்தின் மாண்பை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதித்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் அவர்களுக்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்தாக வேண்டும். அப்படி அனுப்பி வைக்காதது முறையானது அல்ல. இந்தச் சபையின் மாண்புக்கு விரோதமானது ஆகும்.  ஆளுநர் அவர்கள் அனுப்பி வைக்காதது என்பது எனக்கல்ல; இந்தத் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கக்கூடிய செயலாகும்.  

நான் இந்தப் பேரவைக்குச் சொல்வதெல்லாம் - சொல்ல விரும்புவதெல்லாம், கடந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் நான் எத்தனையோ வலிகளையும், அவமானங்களையும் சந்தித்து வந்திருக்கிறேன்.

அது எனக்கு ஒரு பொருட்டல்ல.  இந்த 50 ஆண்டு கால பொது வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்தது எல்லாம் வலிகளையும், அவமானங்களையும், புகழ்ச்சிகளையும், பாராட்டுரைகளையும் புறந்தள்ளிவிட்டு - “என் கடன், பணி செய்து கிடப்பதே”என்று செயல்படுவதுதான்.  அப்படித்தான் நான் செயல்பட்டு வருகிறேன்.

பொது வாழ்க்கையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதுதான் தலையாய கடமை என்பதே பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழியிலே நான் கற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாடமாகும்.  அந்த வழியில்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.

ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைக்கக்கூடிய வலி, அவமானங்களைப் பொறுத்துக் கொண்டு, அதனால் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கும் என்றால், புகழ்ச்சிகளையும், பாராட்டுரைகளையும் நான் புறந்தள்ளி விட்டு, அவமானங்களையும், வலிகளையும் தாங்கிக் கொள்ளவே நான் எப்போதும் தயாராக இருப்பேன்.  

தமிழ்நாட்டு மக்களுடைய ஒட்டுமொத்த உணர்வாக இருக்கக்கூடிய நீட் விலக்கு சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் முக்கியம். அதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  எனவே, தனிப்பட்ட ஒரு நபருக்கான மரியாதைகள், புகழுரைகள் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தொடர்ந்து நான் முயற்சித்துக் கொண்டேயிருப்பேன் என தனது எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்.


முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த பேச்சு திமுகவிற்க்கு ஆளுனரை எதிர்க்க துணிவில்லையோ என பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாகி இருக்கிறது, ஆளும் திமுக கட்சியினர் உட்பட அதன் கூட்டணி கட்சியினரும் ஆளுனரின் நடவடிக்கையில் கடும் கோபமடைந்திருப்பதின் விளைவே நேற்றைய கவர்னர் காண்வாய் மறிப்பு, எதிர்ப்பு. 

இத்தனைக்கும் கல்வீச்சு, காயம் , வன்முறை என எதுவும் இல்லாமல் ஜனநாயக முறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்க்கே அரசு தரப்பில் பதட்டம் தெரிகிறது, அவசர அவசரமாக காவல்துறை தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது, "கான்வாய் மீது (கவர்னர் மீது அல்ல) தாக்குதல் நடத்தப்படவில்லை" என்று. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடுக்கும், ஆட்சியில் தலையிடும்  கவர்னரை எதிர்ப்பதில் திமுக காட்டும் அணுகுமுறை 'தடியும் உடையக் கூடாது பாம்பும் சாகனும்' என்பது போல் இருக்கிறது என்கின்றனர் ஆளும் கட்சியினர். ஆனால் இதே அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆளுனரை எப்படி ஓடவிட்டார் தெரியுமா? என ஜெயலலிதா விசுவாசிகள் பழைய சம்பங்களை பெருமையோடு சுட்டிக் காட்டுகின்றனர்.

தமிழக ஆளுநராக எம்.சென்னாரெட்டி இருந்த காலம் அது. முதல்வராக ஜெயலலிதா முதல் முறை அதிகாரத்திற்கு வந்திருந்ததும் அந்த காலகட்டம்தான். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்தது. சிறிது சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார். அப்பேர்ப்பட்ட சூழலில் கூட, ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான ஆட்சேபணை எழுப்பினார். 

இதன்பிறகு 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஆளுநருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதினார்.

அது மட்டுமா, மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தலையிடுகிறார் என்று கூறி சென்னாரெட்டி வாகன அணிவகுப்பைத் திண்டிவனம் அருகே வழிமறித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி ஷாக் கொடுத்தனர். மேலும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு நாளன்று ஆளுநர் நடத்தும் மாலை நேரத் தேநீர் விருந்துகளை ஜெயலலிதா புறக்கணித்தார். அதுமட்டுமல்லாது, அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஆளுநரின் தேநீர் விருந்துக்கு போகக் கூடாது என்று கடும் உத்தரவும் பிறப்பித்தார்.

சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோதுதான், தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டினார். அப்போதைய தூத்துக்குடி எம்.எல்.ஏ. ரமேஷ் தலைமையில் அதிமுகவினர் ராஜ்பவனுக்கு ஊர்வலமாகச் சென்று ஆளுநருக்கு நெருக்கடியை அதிகரித்தனர். இப்படியெல்லாம் ஜெயலலிதாவும், அவர் சொல்படி அதிமுகவினரும் கொடுத்த நெருக்கடிகளால், அதன்பிறகு தமிழகத்தில் எந்த ஆளுநரும் அரசின் ஆட்சி அதிகாரங்களில் தலையிட்டதே கிடையாது. திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டங்களிலும் ஆளுநர் என்பவர் ஒரு அரசியல் சாசன பதவியில் வலம் வருவோராக மட்டுமே இருந்தார்.

மேற்கு வங்கத்தில் இதே போல ஆட்சியில் தலையிடும் கவர்னர் ஜெகதீப் தங்காரை மம்தா தினமும் பந்தாடுகிறார்.

தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் அதிகாரிகளை ஜெகதீப் தங்கார் கட்டுப்படுத்த பார்க்கிறார்.. அது வேலைக்கு ஆகவில்லை என்றதும் அரசுக்கு எதிராக தினமும் ட்விட்டரில் எதையாவது ஆளுநர் உளறிக்கொண்டு இருக்கிறார். அவர்தான் பெரிய பவர்புல் போல நினைக்கிறார். அவரை விட முதல்வருக்குதான் அதிகாரம் அதிகம் உள்ளது. அவருக்கு நாங்கள் அடிமை இல்லை என சீறிய மம்தா ஆளுனரை ட்விட்டரில் பிளாக் செய்தார்.

மற்றொரு சமயத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் நடந்த மீட்டிங் ஒன்றில் கிழக்கு மித்னாபூர் எஸ்பியிடம் மம்தா கோபமாக பேசினார். அது பாஜக தலைவர் சுவேண்டு அதிகாரியின் சொந்த ஊர் ஆகும். அந்த பகுதி எஸ்பியிடம் கோபமாக பேசிய மம்தா, உங்கள் பகுதியில் பணிகள் சரியாக நடக்கவில்லை.நான் போடும் உத்தரவுகள் அமலுக்கு வரவில்லை. உங்களுக்கு அரசியல் நெருக்கடி வந்தால் என்னிடம் சொல்லுங்கள். கவர்னர் உங்களை கூப்பிட்டால் என்னிடம் சொல்லுங்கள். அவர் உங்களிடம் பேசினால் என்னிடம் சொல்லுங்கள்.. அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. நீங்கள் போலீஸ். நீங்கள் மாநில பணியில் இருக்கிறீர்கள். நீங்கள் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம். ஏதாவது அரசியல் அழுத்தம் வந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று ஜெகதீப் தங்காருக்கு எதிராக மம்தா காட்டமாக குறிப்பிட்டார்.

இப்படி ஆட்சியில் தலையிட்ட ஆளுனர்களை பெண் முதல்வர்கள்  துணிவுடன் எதிர்த்து ஓட விட்ட சம்பவங்கள் வரலாறாக இருக்கையில் , தமிழக ஆளுநர் அப்பட்டமாக ஆட்சியில் தலையிடும் போக்கு அதிகரித்துள்ள நிலையிலும், "பொது வாழ்க்கையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவதுதான் தலையாய கடமை என்பதே பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழியிலே நான் கற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாடமாகும்" என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது மக்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது அப்பட்டமான உண்மை.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post