கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா...கலெக்டர் முரளீதரன் சாமிதரிசனம் செய்து ஆய்வு!

 தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் பளியங்குடி எனுமிடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் கேரள எல்லையில் மங்கல தேவி கண்ணகி கோவில் உள்ளது. 

சிலப்பதிகாரத்தில் போற்றப்பட்ட கண்ணகி, பாண்டிய மன்னன் முழுமையாக விசாரிக்காமல் தனது கணவன் கோவலனுக்கு மரண தண்டனை அளித்துக் கொன்று விட்டதை அறிந்தார். தீப்பொறிக்கும் கோபத்துடன்  பாண்டிய மன்னனின் அரச சபையில் சிலம்பினை அடித்து நீதி கேட்ட கதை பெரும்பாலானோருக்கு தெரியும். அங்கு தனது கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உணர்த்தி விட்டு, மதுரை பற்றி எரிய சாபம் சாபம் விட்டு மதுரையை எரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.  

14 நாட்கள் நடந்து சென்ற கண்ணகி திருச்செங்குன்றம் எனும் மலையில் இருந்து தேவலோகம் சென்றதாக வரலாறு சொல்கிறது. இந்த இடத்தில்தான் மங்கலதேவி கண்ணகி கோயில் இருக்கிறது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் மட்டும் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

 மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா சித்ரா பவுர்ணமி நாளான நாளை(ஏப்-16) நடைபெறுவதை  முன்னிட்டு மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், இன்று மங்கலதேவி கண்ணகி கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு சாமிதரிசனம் செய்தார்.

 உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த்,உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, வருவாய் கோட்டாட்சியர் செல்வி கவுசல்யா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.புலிகள் காப்பக பகுதியான வனப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளதால் தான் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இதுகுறித்து கலெக்டர் க.வீ.முரளீதரன் கூறுகையில்:

 நாளை நடைபெறவுள்ள கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்திட ஏதுவாக பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், மேலும், காவல்துறையினர் கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆண், பெண் காவலர்களை பணியில் ஈடுபடுத்தி உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.  வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பக்கதர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை மூலம்  முதலுதவி ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு மீட்பு வாகனத்தினை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. 

வனத்துறையினர் வன விலங்குகளால் பொது மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் தடுப்பு வேலிகளை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.  விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் பயன்படுத்திய பொருட்களை உடனுக்குடன் அகற்றுவதற்கான பணியில் போதிய பணியாளர்களை நியமிக்கப்பட்டு உள்ளது. நாளை நடைபெறவுள்ள விழாவினை சிறப்பான முறையில் நடத்திட அனைத்துத்துறை அலுவலர்களும் பணியாற்றிட வேண்டும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்தார்.


-ரா. சிவபாலன், தேனி மாவட்ட செய்தியாளர்.

Previous Post Next Post