விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்... பூசனிக்காய் ஆரத்தி.. மூன்றாம் ஜாமத்தில் அரபிக்குத்து!

பீஸ்ட் படம் இன்று அதிகாலை ரிலீசான நிலையில் தியேட்டர் வாசல்களில் பட்டாசு வெடித்தும் விஜய் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் ரசிகர்கள் உற்சாகமாக வந்து படம் பார்த்தனர். 

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. 'டாக்டர்' படத்தை அடுத்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இப்படத்தில் விஜய் 'வீரராகவன்' என்கிற 'ரா' உளவுப்பிரிவு அலுவலராக நடித்துள்ளார். 

மேலும், பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பார்க்க தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். சென்னை, மதுரை, கோவையில் ரசிகர்கள் காலை முதல் தியேட்டர்களுக்கு வரத்தொடங்கி உற்சாகமாக படம் பார்த்தனர். 

திருப்பூரில் விஜய் மக்கள் இயக்கம் மற்றும் விஜய் ரசிகர்கள் திரையரங்கின் முன்பு, தாரை தப்பட்டைகள் வாசித்தும், பட்டாசு வெடித்தும் விஜய் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்தனர். மேலும் பூசனிக்காய் ஆரத்தி, தாரை தப்பட்டைக்கு குத்தாட்டம் என மூன்றாம் ஜாமத்தில் உற்சாகமாக கொண்டாடினார்கள்.  தியேட்டர்களில் ரசிகர்கள் குவிந்து வானவேடிக்கை நிகழ்த்தியும் கரகோஷங்களுடனும் உற்சாகமாக படம் பார்த்தார்கள். 

பீஸ்ட் வெளியாகும் ஒவ்வொரு தியேட்டர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதிகாலை முதலே காத்திருந்தனர்.  ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். படம் ரிலீசான நிலையில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் உள்ளே சென்று படம் பார்த்தனர். படத்தில் வரும் அரபிக்குத்து பாடலுக்கு தியேட்டர்கள் அல்லோலப்பட்டன; அந்தளவுக்கு ரசிகர்கள் உற்சாகமாக ஆடினர்.
Previous Post Next Post