தூத்துக்குடி கல்விக்கு பெயர் பெற்ற மாவட்டம் - மாணவ மாணவிகளிடையே ஆட்சியர் செந்தில்ராஜ் பேச்சு.!


தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ - இந்தியன் பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மாணவர்கள் பொதுத்தேர்வினை 

எப்படி கையாள்வது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்,  தலைமையில் இன்று  நடைபெற்றது.

நிகழ்ச்சியில், நவீன தொழில்நுட்ப ஆய்வகத்தில் நடைபெற்ற வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற 35 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.2000 மதிப்பிலான பரிசுபொருட்களையும், 


தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருச்செந்தூர் தேரிக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் கோவில்பட்டி வானரமுட்டி எஸ்.டி.சி. கிளை தொடக்கப்பள்ளிக்கு 2019-2020ம் கல்வி ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்களையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,  வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , கல்வித்துறையில் கொரோனா காலத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்வதற்கு பள்ளி கல்வித்துறையில் நிறைய சீர்திருத்தங்கள், கொள்கை மாற்றங்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம்,

நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர், நான் முதல்வன் திட்டத்தினை பற்றியும், அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிலும் அறிவுறுத்தியிருந்தார்கள்.

ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் ஒளிந்துள்ள திறமைகளை வெளிக்கொணர ஆசிரியர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


அரசு திட்டங்களை கொண்டு வந்தாலும், திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவது அரசு அதிகாரிகள்தான். தலைமை ஆசிரியர்கள் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு வகுப்புகள் சரியாக எடுக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். 

மேலும், வகுப்பில் திறன் குறைந்த மாணவர்களை இத்திட்டத்தில் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

மாணவர்களின் கல்வி பணியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். தூத்துக்குடி கல்விக்கு பெயர் பெற்ற மாவட்டம். சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இங்குள்ள ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் வரும் கல்வி ஆண்டில் மாநில அளவில் முதலிடம் பெற வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் என்னென்ன தேவைகள் என்பதை தெரிவித்துள்ளார்கள். பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.


சிறிய சிறிய வேலைகளை நீங்கள் நினைத்தால் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் செய்துவிடலாம். உங்களால் முடிந்த சிறிய பணிகளை அடுத்த கல்வியாண்டிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் சுமார் ரூ.5 லட்சத்தில் 2 பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பேருந்துகளில் படிகளில் பயணம் செய்வதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசித்து தேவையான பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சாலை பாதுகாப்பு குழு ஒவ்வொரு பள்ளியிலும் அமைக்கப்பட வேண்டும். இக்குழுவிற்கு தலைமை ஆசிரியர் தலைவராகவும், உடற்கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார். 

தமிழகத்தில் 2015ம் ஆண்டில் சாலை விபத்துகளில் சுமார் 17000 பேர் இறந்துள்ளனர். சுமார் 75000 விபத்துகள் நடந்துள்ளது. 2019ம் ஆண்டில் சாலை விபத்துகளில் சுமார் 11000 பேர் இறந்துள்ளனர். 

2030ம் ஆண்டிற்குள் விபத்தில்லா தமிழ்நாடு, இந்தியாவை உருவாக்க பணியாற்றி வருகிறோம். பல்வேறு துறைகள் இணைந்துதான் இந்த இலக்கினை அடைய முடியும் என பேசினார்.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விநாயகம் (தூத்துக்குடி), சம்பத்குமார் (திருச்செந்தூர்), நெடுஞ்செழியபாண்டியன் (கோவில்பட்டி), 

மாவட்ட கல்வி அலுவலர்கள் உஷா சாந்த ஜாய் (தூத்துக்குடி), மோகனன்(திருச்செந்தூர்), சின்னராஜ் (கோவில்பட்டி), வட்டாட்சியர் செல்வகுமார், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், தூத்துக்குடி பாராளுமன்ற அளவிலான சாலை பாதுகாப்பு ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்பவர்சங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post