தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேவாபிளாசா கூட்டரங்கில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து மே 5ல் திருச்சியில் நடைபெறும் மாநாடு குறித்து சிறப்புரையாற்றினார். இதில் வணிகர்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் மே 5ல் நடைபெறவுள்ள மாநாட்டில் 5 லட்சம் வணிகர்கள் பங்கேற்க உள்ளதாகவும், அகில இந்திய தலைவர்கள், ஒவ்வொரு மாநிலத்திலும் வணிகர்கள் சங்கத்தின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும், இந்த மாநாடு தங்கள் அமைப்பிற்கு திருப்புமுனை மாநாடாக, வணிகர்களின் கோரிக்கை நிறைவேறும் மாநாடாக இருக்கும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாகவும், இந்த மாநாடு வணிகர்களின் குறைதீர்க்கும் வெற்றி மாநாடாக அமையும் என்றார். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க கடைகளுக்கு தான் அதிகாரிகள் வருகின்றனர் தவிர அது உற்பத்தி செய்யும் இடத்தில் தடுப்பதை விட்டு விடுவதாகவும், சமானிய வியாபாரிகளின் கடைகளை சீல் வைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி அரசுக்கு அவப்பெயர் ஏற்படும். அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பொருள்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது என்பதில் வணிகர் சங்கங்களின் பேரரமைப்பு உறுதியாக இருப்பதாகவும்,கடந்த அரசுக்கும், தற்பொழுதைய அரசுக்கும் தாங்கள் ஒத்துழைப்பினை கொடுத்து வருகிறோம். இந்து அறநிலையத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் உள்ள கடைகளின் வாடகை பிரச்சினை, தடை செய்யப்பட்ட பொருள்கனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை சீல் வைக்கமால் சிறு வணிகர்கள் கடையை சீல் வைப்பதனை கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல், சுங்கசாவடி கட்டண உயர்வு தான் விலைவாசி உயர்வுக்கு காரணம், விலையேற்றத்திற்கும் வியாபாரிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்றும்,
பெரிய நிறுவனங்கள், சில்லறை வணிகத்தினை கைப்பற்றும் சூழ்ச்சி நடைபெற்று கொண்டு இருப்பதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
கலப்படம் செய்பவர்களுக்கு நாங்கள் துணை போவது கிடையாது, அவ்வாறு செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், எண்ணெணெய் வித்துகளில் மற்ற எண்ணெணெய்களுடன் கலப்பு செய்யலாம் என்று அரசு கூறியுள்ளது. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியிடம் கோரிக்கை தர உள்ளதாக தெரிவித்தார்.