தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (04.04.2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் இளம் அறிவியல் விருது பெற்ற மாணவன் ஷகில் இஜாஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட, பார்வையற்றோர்களுக்கான ரீச்சார்ஜ் வசதியுடன் இயங்கக்கூடிய மடக்கு குச்சி,
வாகன ஓட்டுநர்களுக்கான முன்னெச்சரிக்கை கண்ணாடி உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகள் பார்வையிடப்பட்டு, அந்த மாணவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவன் ஷகில் இஜாஸ் கடந்த ஜனவரியில் Young Scientist விருதும் பெற்றுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 377 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.
மேலும், இளம் அறிவியல் விருது பெற்ற பாரத ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவர் ஷகில் இஷாஸ், பார்வையற்றோர்களுக்கு ரீசார்ஜ் வசதியுடன் கூடிய மடக்கு குச்சி, வாகன ஓட்டுநர்களுக்கான முன்னெச்சரிக்கை கண்ணாடி, அட்வான்ஸ் சென்சார் பல்ப், ப்ளுடூத் ஸ்பீக்கர், ஹோம் தியேட்டர், மஸ்கிடோ கில்லர், பவர் பேங்க் உள்ளிட்ட புதிய கண்டுபிடிப்புகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து பாராட்டு பெற்றார். மேலும், மாவட்ட ஆட்சியர், மாணவரின் திறமையை பாராட்டியதோடு, பார்வையற்றோர்களுக்கு ரீசார்ஜ் வசதியுடன் கூடிய மடக்கு குச்சி 5 எண்ணம் தயாரிக்கும்படி கூறியதோடு, மாணவருக்கு உதவும்படி துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
வாகன ஓட்டுநர்கள் வாகனத்தில் பயணிக்கும்போது சாலை விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடியினை தயாரித்துள்ளார். இந்த கண்ணாடி அணிந்துகொண்டு வாகனம் ஓட்டும்போது, தூங்கினால் ஒரு நிமிடம் அலாரம் அடித்து தூங்காமல் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை ஏற்படுத்தும். மேலும் இதுபோன்ற பயனுள்ள கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க மாணவரை மாவட்ட ஆட்சியர் ஊக்குவித்தார்.
மேலும், பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் மாநில திட்டம் 2021 – 2022 ஆம் ஆண்டு பட்டு வளர்ப்பு மேற்கொண்டு பட்டுக்கூடு அறுவடை செய்து அதிக மகசூல் பெற்ற விவசாயிகளான கோவில்பட்டி லட்சுமியம்மாள்புரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு ரூ.25,000 மும், கோவில்பட்டி லிங்கம்பட்டியை சேர்ந்த சிங்கராயர் என்பவருக்கு ரூ.20,000மும், திருவைகுண்டம் உடையார்குளத்தை சேர்ந்த செ.ராஜாத்தி என்பவருக்கு ரூ.15,000த்தினை மாவட்ட ஆட்சியர் பரிசாக வழங்கினார். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குநர் வீரபத்திரன், சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.