“டெல்லி அரசு மாதிரி பள்ளிபோல தமிழ்நாட்டிலும் பள்ளிகளை உருவாக்க போகிறோம்.. எல்லா துறையை போல கல்வி, மருத்துவத்துக்கும் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது!”
டெல்லி அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!
டெல்லியில் திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக 4 நாட்கள் பயணமாக அங்கு சென்றுள்ள முதலமைச்சர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாடு வளர்ச்சி பணிகள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார். மேலும் உள்துறை, நெடுஞ்சாலைத்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சர்களை சந்தித்தும் பேசினார். நீட் விலக்கு மசோதா குறித்து உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரிடம் அழுத்தமாக பதவு செய்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள அரசு மாதிரி பள்ளியை பார்வையிட்டார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் மலர் கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், அங்குள்ள அரசுப் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடங்கள் எப்படி கற்பிக்கப்படுகிறது, ஏசி வகுப்பறைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய இலவசக் கல்வி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கி கூறினார். அரசு மாதிரிப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை எடுக்கப்படும் மகிழ்ச்சி வகுப்புகள் அதாவது புத்தகமில்லா வகுப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மாணவர்களின் மன அழுத்தங்களைப் போக்கும் வகையில், இசை, யோகா உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது என்பது குறித்தும் விவரிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் பள்ளி மாணவ, மாணவர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இதேபோல் பள்ளியை தமிழகத்தில் விரைவில் உருவாக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
#MKStalin | #GovtSchools