'மத்திய அரசின் நிர்ப்பந்தமே சொத்து வரி உயர்வுக்கு காரணம்' - அமைச்சர் கே.என் நேரு விளக்கம்!

ஒன்றிய அரசின் நிர்ப்பந்தம் காரணமாகவே தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில்

சொத்து வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு உள்ளாட்சி அமைப்புகளின் சொத்து வரி வீதத்தை ஆண்டுதோறும் உயர்த்திட வேண்டும் என்று ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டுள்ள 15 ஆவது நிதி ஆணையம் நிபந்தனை விதித்துள்ளது. ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ரூட் திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சொத்து வரி சீராய்வு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க 2019 இல் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படுகிறது.601 முதல் 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதமும், 1201 முதல் 1800 சதுர அடி வரையிலான பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 75 சதவீதமும் வரி உயர்த்தப்படுகிறது. 1800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி அதிகரிக்கப்படுகிறது.

தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு 75 சதவீதமும் வரி உயர்த்தப்படுகிறது.

சொத்து வரி உயர்வுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டெல்லியில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வரி உயர்வு அமலுக்கு வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் குறைவாகவே சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சொத்து வரியை உயர்த்தினால் மட்டுமே தமிழகத்துக்கு வர வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி விடுவிக்கப்படும் என ஒன்றிய அரசு கூறியதாலேயே வரி உயர்வு விதிக்கப்பட்டது. 15ஆவது நிதிக்குழு வரி உயர்வை விதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 200 சதவீதம் சொத்து வரியை உயர்த்தினர். தேர்தல் வந்ததால் தாங்கள் வெளியிட்ட்ட சொத்துவரி உயர்வை அவர்கள் நிறுத்தி வைத்தனர” என்று கூறியுள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post