கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்.டி.இ. (Right To Education) என்று அழைக்கப்படும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு வரும் 20 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 2022-23 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை பற்றி பெற்றோர் அறியும் வகையில், தனியார் பள்ளிகளின் நுழைவாயிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசு 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வழங்க ‘குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009’ என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் ஏப்ரல் 1, 2010 முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.