திருச்சி மாவட்டம், துறையூர் அருகே செல்லிப்பாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அம்மன் வீதி உலா நிகழ்ச்சிக்காக டிராக்டரில் சாமி சிலை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதில் அம்மன் சிலையை யாருடைய டிராக்டரில் ஏற்றுவது என்பது தொடர்பாக பிரச்சினை ஏற்ப்பட்டது.
அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்பவரது மகன்கள் சந்திரசேகர் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும், மற்றோர் தரப்பான வினோத் முரளிதரன் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு கைகலப்பும் ஆகி உள்ளது.
இந்த நிலையில் அம்பேத்கார் நகர் தெற்கு பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு சந்திரசேகரும் அவருடைய தம்பி கார்த்திக்கும் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அருள், முரளிதரன் ஆகிய இருவரும் சேர்ந்து பிரசாந்த், வினோத் மற்றும் உறவினர் பாண்டியன் ஆகியோரும் சந்திரசேகரையும், கார்த்தியையும் தாக்கியுள்ளனர்.
மகன்கள் அடிவாங்குவதை நேரில் பார்த்த தாய் சிவகாமி சண்டையை விலக்கி விட சென்றார். அப்போது சிவகாமிக்கும் சரமாரியாக அடி விழுந்துள்ளது. இதில் காயமடைந்த சிவகாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார், முசிறி டிஎஸ்பி அருள்மணி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸார் நேரில் சென்று விசாரித்தனர்.
சிவகாமியின் பிரேதத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத விசாரணைக்காக அனுப்பிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இருதரப்பினரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.