கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுடன் இளையரசனேந்தல் பிர்க்காவிலுள்ள 12 பஞ்சாயத்துகளை இணைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக நேற்று தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுடன் இளையரசனேந்தல் பிர்க்காவில் உள்ள 12 கிராம பஞ்சாயத்துக் களை இணைக்க கோரி தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு, இளையரசனேந்தல் பிர்க்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன் தலைமையில் 12 கிராம மக்கள் பிரதிநிதிகளுடன் நேற்று சென்னையிலுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் கோரிக்கை மனுவை வைத்து பிரார்த்தனை செய்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலையில் தாசில்தார் அமுதா தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேர்தல் துணை தாசில்தார் கோவிந்தராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரெங்கநாயகலு, இளையரசனேந்தல் பிர்க்கா உரிமை மீட்புக் குழு தலைவர் முருகன், ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பாளர் கற்பூரராஜ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இளையரசனேந்தல் பிர்க்காவில் உள்ள 12 பஞ்சாயத்துகளையும், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியனுடன் இணைப்பது தொடர்பாக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் கருத்துருக்களை அனுப்பியுள்ளார். இதன் மீது மாவட்ட கலெக்டர் துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வுகிடைத்துவிடும் எனவும் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.