காகிதம் ,அச்சக மூலப்பொருட்கள் விலையேற்றத்தால் அச்சக தொழில் பாதிப்பு.! - ஜிஎஸ்டி வரியை குறைக்க ஆட்சியர் அலுவலகம் முன் அச்சக உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்.!

காகிதம் மற்றும் அச்சக மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் கல்வித் துறையிலும், பொதுமக்களும், அச்சகங்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன, ஆகவே அனைத்து அச்சக பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியை 18% சதவீதத்திலிருந்து 12% சதவீதமாக குறைக்கவும் , காகிதப் பற்றாக்குறையை முறைப்படுத்தவும் வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆஃப்செட் அச்சக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் T. அருள்ராஜ், செயலாளர் R. பாலாஜி, பொருளாளர் A. அருள்ராஜ் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது தொடர்பாக ஆட்சியரிடம் அளித்த மனுவில்..

கொரோனா ஆரம்பகாலம் முதல் கடந்த 2- வருடமாக அச்சுத் தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. அச்சக உரிமையாளர்களும், தொழிலாளர்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளானதோடு வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது. ஆனால் தற்போது காகிதத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 2021ஆண்டு மார்ச் மாதம் முதல் அச்சடிக்கும் காகிதத்தின் விலை 1 மெட்ரிக் டன் ரூபாய் 36,000 - 45,000 என விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே காகிதம் தற்போது ஒரு மெட்ரிக் டன் ரூபாய் 82,000-க்கு விற்கப்படுகிறது. இதுபோல் நியூஸ் பிரிண்ட் செய்தித்தாள் காகிதமும் மற்றும் கோட்டட் பேப்பர், ஆர்ட் பேப்பர், கிராப்ட் பேப்பர், பைண்டிங் அட்டை போன்றவைகளும் தற்போது 150 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை விலை உயர்ந்து உள்ளது. இதன்விளைவாக பாடப்புத்தகங்கள். நோட்டு புத்தகங்கள். திருமண அழைப்பிதழ்கள் மற்றும் அனைத்துறைகளில் பயன்படுத்தும் காகிதங்கள் விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

தற்போது காகிதத்தின் விலை அதிகரிப்பது மட்டுமல்லாமல் காகிதத்தின் பற்றாக்குறையும் ஏற்ப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். காகித ஆலை உரிமையாளர்களும் சரியான விலையேற்றத்தை முறைப்படி தெரிவிப்பதில்லை. எந்தவொரு காகித ஆலையும் அச்சக உரிமையாளர்களையோ, அச்சக சங்கங்களையோ அழைத்து இந்த விலையேற்றம் குறித்து ஆலோசிப்பதில்லை.

மேலும் தற்போது அனைத்து அச்சக பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளதும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது . ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக குறைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் தற்போது முழுநேரமும் செயல்படும் இக்காலகட்டத்தில் காகிதத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆதலால் காகிதம் மற்றும் அச்சக மூலப்பொருட்களின் விலையேற்றத்தால் கல்வித் துறையிலும், பொதுமக்களும், அச்சகங்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுசமயம் அரசு தலையிட்டு இந்த விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வந்து அச்சகங்களும், அதுசார்ந்த துறைகளும் நலிவடையாமல் மீண்டெழச் செய்வீர்கள் என நம்பிக்கையுடன் தமிழ்நாடு அச்சக சங்கங்களின் சம்மேளனம் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம், என தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆஃப்செட் அச்சக சங்க நிர்வாகிகள், சுப்புராஜ், அமிர்தராஜ், ராஜன், சங்கரநாராயணன், பிரேம், ஜோசப் (மாதா), சாம்ராஜ், வைணவ பெருமாள், ஹரிஹரபுத்திரன், வீரா, ஜோசப், ஸ்ரீநிவாசன், ஜாகிர் உசைன்,J.J. பிரிண்டர்ஸ் உரிமையாளர் உள்ளிட்ட ஏராளமான அச்சக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post