"ஹிந்தி பேச முடியாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்" - உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், சர்ச்சை கருத்து.

உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தி மொழி குறித்துக் கூறிய கருத்து தேசிய அளவில் பெரும் விவாதத்துக்கு வித்திட்டது. அதைத் தொடர்ந்து நடிகர் கிச்சா சுதீப், அஜய் தேவ்கன் இருவருக்குமிடையில் அண்மையில் ட்விட்டரில் இந்தி மொழி குறித்து உரையாடல் நடைபெற்றது. இதில் அஜய் தேவ்கன் `இந்திதான் இந்தியாவின் தேசியமொழி’ என்று கூறினார்.

இதற்கு கிச்சா சுதீப், `மற்ற மொழிகளைப்போல இந்தியாவின் ஒரு மொழிதான் இந்தி’ எனக் கூறினார். இவர்களின் இந்தக் கருத்து பகிர்வு இந்திய அளவில் ஹாட் டாப்பிக்காக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இந்திக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல் கொடுத்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், "இந்தியாவில் வாழ விரும்புபவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். நீங்கள் இந்தியை நேசிக்கவில்லையென்றால், நீங்கள் ஒரு வெளிநாட்டவர் அல்லது வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்புடையவர் என்று கருதப்படுவீர்கள். இந்தி பேச முடியாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறி வேறு எங்காவது சென்றுவிடுங்கள். நாங்கள் பிராந்திய மொழிகளையும் மதிக்கிறோம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியா என்பது ‘இந்துஸ்தான்.’ இது இந்தி பேசுபவர்களுக்கான இடம். இந்துஸ்தான் இந்தி பேசாதவர்களுக்கு ஏற்ற இடமல்ல. அவர்கள் இந்த நாட்டைவிட்டு வேறு எங்காவது செல்லலாம்" என்றார்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் நான் அமைச்சராக எவ்வித விருப்பு, வெறுப்பின்றி பணியாற்றுவேன் என அரசியல் சட்ட உறுதி மொழி எடுத்து அமைச்சரான ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post