ஊரடங்கு விதி மீறல் - இங்கிலாந்து பிரதமர் மற்றும் நிதி மந்திரிக்கு லண்டன் போலீசார் அபராதம் விதித்து நோட்டீஸ்.! - ராஜினாமா செய்ய எதிர்கட்சிகள் வலியுறுத்தல்.!

கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி மது விருந்தில் கலந்து கொண்டதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதி மந்திரி ரிஷி சுனக் ஆகியோருக்கு லண்டன் போலீசார் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பினர்.

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போரிஸ் ஜான்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன.

 இதற்கிடையே, கொரோனா காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதி மந்திரி ரிஷி சுனக் ஆகியோருக்கு லண்டன் போலீசார் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பினர்.

பிரதம மந்திரியின் தனிப்பட்ட அலுவலகமாகவும் அவரது அதிகாரப்பூர்வ இல்லமாகவும் செயல்படும் எண். 10 டவுனிங் தெருவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜான்சன் மற்றும் நிதியமைச்சர் ரிஷி சுனக் இருவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

“பிரதம மந்திரி (போரிஸ் ஜான்சன்) மற்றும் நிதியமைச்சர் (ரிஷி சுனக்) இன்று பெருநகர காவல்துறை அவர்களுக்கு நிலையான அபராத அறிவிப்புகளை வழங்க உத்தேசித்துள்ளதாக அறிவிப்பைப் பெற்றுள்ளனர். எங்களிடம் கூடுதல் விவரங்கள் இல்லை, கூடுதல் விவரங்கள் கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கப்படும்  ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவரான சர் கெய்ர் ஸ்டார்மர், உடனடியாக ஜான்சன் மற்றும் ரிஷி சுனக்கை ராஜினாமா செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பதிவில் " போரிஸ் ஜான்சன் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் சட்டத்தை மீறி பிரிட்டிஷ் பொதுமக்களிடம் பலமுறை பொய் கூறியுள்ளனர். இருவரும் பதவி விலக வேண்டும். இருவரும் ஆட்சியமைக்க முற்றிலும் தகுதியற்றவர்கள், பிரிட்டன் சிறப்பாக இருக்க வேண்டும் " என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/Keir_Starmer/status/1513863475759566853?t=Y0LN8QN4qx2TjFXi5LwjbQ&s=19

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், மது விருந்தில் பங்கேற்றதற்காக போலிசார் விதித்த அபராதத்தைச் செலுத்திவிட்டேன். விதிகளை மீறி மதுவிருந்தில் கலந்து கொண்டதற்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார். 

கடந்த மே 2020 இல் டவுனிங் தெருவில் "bring your own booze"(உங்கள் சொந்த சாராயத்தைக் கொண்டு வாருங்கள்) என்ற விருந்தில் கலந்துகொண்டதற்காக ஜான்சன் ஜனவரி மாதம் மன்னிப்புக் கேட்டார்  என்று இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அபராதத்தின் அளவும் வெளியிடப்படவில்லை.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post