தூத்துக்குடி ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி சார்பாக மாநில அளவிலான மினி மாரத்தான் - எஸ்பி பாலாஜி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி சார்பாக நடைபெற்ற  மாணவியருக்கான மாநில அளவிலான மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்து ‘காவல் உதவி” செயலி குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

 

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி சார்பாக இன்று (09.04.2022) பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கு நடைபெற்ற மாநில அளவிலான மினி மாராத்தான் போட்டியில் சுமார் 1000 மாணவியர்கள் கலந்து கொண்டு ஏ.பி.சி மகாலட்சுமி கல்லூரியிலிருந்து புறப்பட்டு தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி, கருத்தபாலம், புதிய பேருந்து நிலையம், சிட்டி டவர் ஜங்கசன் வழியாக வந்து மீண்டும் ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரியில் நிறைவு செய்தனர். இந்த மினி மாராத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் கொடி அசைத்து துவக்கிவைத்து ‘காவல் உதவி” செயலி குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மாணவியர்களாகிய உங்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த தன்னம்பிக்கை தான் உங்களை எதிர்காலங்களில் சமூகத்தில் தலை சிறந்தவர்களாக மாற்றும். மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ”காவல் உதவி“ என்னும் செயலியை துவக்கி வைத்துள்ளார். இந்த செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் அவசர காலங்களில் சிவப்புநிற ‘அவசரம்” என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் உங்கள் நேரடி இருப்பிடம் பகிரப்படும், பின்புற கேமராவை பயன்படுத்தி 15 வினாடிகள் வீடியோ அனுப்பப்படும். நேரடி இருப்பிடம் 30 முதல் 45 நிமிடங்கள் கண்காணிக்கப்படும், செயலியை திறந்து வைத்து அல்லது பின்னணியில் (Need to Keep App Open / Minimize) இயக்க வேண்டும் இதன் மூலம் கண்காணிக்கப்பட்டு கிடைக்கப்பெறும் தகவல்கள் கட்டுப்பாட்டறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும். பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணில் இருந்து அழைப்பதால், பயனாளர் விவரம் மற்றும் தற்போதைய இருப்பிட விவரம் அறியப்பட்டு துரித சேவை வழங்கப்படும்.

மேலும் இந்த செயலி மூலம் பொதுமக்கள் மனு ரசீதின் நிலை, இணைய குற்ற நிதி மோசடி புகார், அவசர உதவி எண்கள், முதல் தகவல் அறிக்கை நிலை, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள், போலீஸ் சரிபார்ப்பு சேவைகள், வாகன சரிபார்ப்பு (திருடப்பட்ட/காணாமல் போன), இழந்த ஆவண அறிக்கை, காவல் நிலைய இருப்பிடங்கள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சேவைகள் அடங்கிய சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவியர்கள் ஆபத்து நேரத்தில் இந்த செயலியை பயன்படுத்தி காவல்துறை உதவியை உடனடியாக பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் விழிப்புணர்வு வழங்கினார்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை ஏ.பி.சி மகாலெட்சுமி கல்லூரி தலைவர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் முனைவர் மீனாகுமாரி, கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் அனிஸ்டா மற்றும் கல்லூரி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post