பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் வரும் 5 ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.
இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகி பழ.கௌதமன் கூறியது:
கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 100 மாணவர்களுக்கு மேல் இருக்கும் பள்ளிகளில் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 16549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டோம். வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் மாதம் 12 அரை நாட்கள் பணிபுரிந்து வருகின்றோம்.
இவர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஆட்சியிலேயே பலக்கட்ட போராட்டங்களை நடத்தினோம். ஆனால் அப்போதைய அரசு பணிநிரந்தரம் செய்யாமல் அவ்வப்போது ஊதிய உயர்வு மட்டுமே வழங்கினர். அந்த ஊதிய உயர்வு கூட மத்திய அரசு அனைவருக்கும் கட்டாய கல்வித்திட்டம் (SSA) எங்களுக்கு ஒதுக்கிய நிதியில் இருந்து தான் கொடுத்துள்ளனர்.மாநில அரசு கூடுதலாக ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்தது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்களுக்கான பணிநிரந்தர அறிவிப்பு வரும் என்று 12,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கான எந்த அறிவிப்பும் வராதது எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.
எனவே எங்களது பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி வருகின்ற 5 ஆம் தேதி முதல் டி.பி.ஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பெருமளவில் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. என்றார்.