2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மக்களை கஷ்டப்படுத்துகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக பிரதமரின் குற்றச்சாட்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அமைந்துள்ளது என சட்டப்பேரவையில் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்..
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கைக்கு, மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரதமர் கூறியுள்ளார். பிரதமரின் பேச்சு முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை போல் அமைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது வரியை குறைக்காமல் வரியை தனதாக்கி கொண்டது மத்திய அரசு. மாநில அரசுகளுக்கும் பகிர்ந்தளிக்கும் வருவாயிலும் கைவைத்தது.
சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன், பாசாங்கு காட்டுவதற்காக பெட்ரோல், டீசல் வரியை குறைத்து மத்திய அரசு வேடம் போட்டது. தேர்தல் முடிந்த பிறகு முன்பிருந்ததை விட மளமளவென உயர்த்தி மக்கள் மீது சுமையை உயர்த்தியது. ஆனால், மத்திய அரசு குறைப்பதற்கு முன்பு தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியை குறைத்தது.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்ற முடிவை மக்களிடம் விட்டு விடுகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
பின்னர் நிதியமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
எந்தவொரு அரசும் வருமானம் இல்லாமல் செயல்பட முடியாது என்பது உண்மை. உற்பத்தியில் வருமானம் குறைவாக வருகிறது. இதனால், மக்களுக்கு அதிகம் செய்ய முடியவில்லை. பெட்ரோல், டீசல் யார் எவ்வளவு போடுகிறார்கள் என்பது தெரியாது. பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தால், பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் பாதிக்கும். திமுக ஆட்சி வந்த பிறகு, பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது தான் வரலாறு. உயர்த்தியது கிடையாது. கருணாநிதி ஆட்சியில் 3 முறையும், தற்போது ஒரு முறையும் வரி குறைக்கப்பட்டுள்ளது.
மக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தியது மத்திய அரசு தான். மாநில அரசின் வரி 50 சதவீதம் மத்திய அரசின் வரி 300 சதவீதம் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அதிக அளவில் உயர்த்தியது மத்திய அரசு தான். பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 7 மடங்கு அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு அதிகரிக்கும் போது எல்லாம் நாங்கள் அதிகரிக்கவில்லை. அப்படி இருக்கையில், குறைக்கும் போது எல்லாம் குறைக்க வேண்டும் என்பது நியாயமில்லை. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் குறைக்கவில்லை என்பது தவறு. அவர்கள் குறைப்பதற்கு முன்னர் நாங்கள் குறைத்துள்ளோம். மொத்த வருமானத்தில் 20 சதவீதம் நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளிக்கவில்லை. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது மத்திய அரசு. இவ்வாறு அமைச்சர் பேசினார்.