கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக் கோவிலில் தெப்பத்திருவிழா.!


கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது.இக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 


தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், திருவீதியுலாவும் நடந்தன. 9ம் திருநாளான 13ம் தேதி தேர் திருவிழாவும், 10ம் திருநாளான 14ம் தேதி தீர்த்தவாரி தீபாராதனையும் நடந்தது.

11ம் திருநாளான நேற்று தெப்பத் திருவிழா நடந்தது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. பின்னர், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோயில் மண்டபத்தில் யாகசாலை பூஜை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் கோயிலில் இருந்து புறப்பட்டு, மெயின் ரோட்டில் உள்ள அடைக்கலம் காத்தான் மண்டபம் வந்தடைந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர், சுவாமி, அம்பாள் திருவீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, கோயில் தெப்பக் குளத்திற்கு வந்தடைந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி, தெப்பத்தை 9 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தெப்பத் திருவிழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறைச் சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், கோவில்பட்டி காவல் துறை டி.எஸ்.பி., உதயசூரியன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தெப்பத் திருவிழாவை முன்னிட்டு, கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், கோயில் செயல் அலுவலர் நாகராஜன், நாடார் உறவின்முறை சங்க துணைத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபால், பொருளாளர் சுரேஷ்குமார், அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் தர்மகர்த்தா மாரியப்பன் உட்பட நாடார் உறவின் முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி, கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தெப்பத் திருவிழா கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post