தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை மது போதையில் அய்யநேரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து கார்த்திக் தனது நண்பர்கள் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த சின்னமணி, கார்த்திக் ஆகியோரை அழைத்து வந்து கடலையூரை சேர்ந்த கல்லூரி மாணவர் வைரமுத்து என்பவரை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வைரமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கார்த்திக் , வீரவாஞ்சி நகரை சேர்ந்த சின்னமணி ,கார்த்திக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீரவாஞ்சி நகர் கார்த்திக் வீட்டின் முன்பு நின்றிருந்த இருசக்கர வாகனத்தினை மர்ம கும்பல் தீவைத்து எரித்து விட்டு தப்பி ஓடியது. இதில் பைக் முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. மேலும் அந்த கும்பல் கார்த்திக் தந்தை காளிதாஸ் கதிரேசன் கோவில் சாலையில் நடத்திவரும் இறைச்சி கடையையும் தீயிட்டுக் கொளுத்தி விட்டு சென்றுள்ளனர். இறைச்சி கடையும் முற்றிலுமாக சேதமடைந்தது உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.