திருப்பத்தூர் கல்லூரி அருகே பாலாற்றங்கரையில் சங்ககால உறை கிணறு,தொல் பொருட்கள் கண்டுபிடிப்பு

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியை சேர்ந்த வேதியல்துறை பேராசிரியர் இளையராஜா, அளித்த தகவலின் பேரில் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தனலெட்சுமி, வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன், ஆகியோர் கல்லூரி அருகே உள்ள கே.வைரவன்பட்டி ஊராட்சி பாலாற்றங்கரையில் சந்திரன் பொட்டல் என அழைக்கப்படும் விசாலாட்சி நகர் பகுதியில் கள மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு 5 அடியில் சேதமடைந்த நிலையில் ஒரு உறை கிணறும் சுடுமண் சில்லாக்குகள் வட்ட வடிவிலான கற்சில்லாக்குகள் மற்றும் ஏராளமான கருப்பு மற்றும் சிவப்பு நிற கலன்களின் உடைந்த பாகங்கள், கற்கருவிகள் மற்றும் சில உபகரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. பல கலன்களில் அழகு வேலைப்பாடுகளும் ஒரு சில பானை ஓடுகளில் கிறுக்கல் குறியீடுகளும் காணப்படுகிறது. இதை தவிர சில எலும்புத் துண்டுகளும் கண்டறியப்பட்டன. அவை விலங்குகளின் எலும்புகளாக இருக்கலாம். இவற்றை நேரடி ஆய்வு செய்த சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான கண்ணன், கூறுகையில், இவை இரும்புக்காலம் மற்றும் கி.மு.6-ம் நூற்றாண்டு முதல் கி.பி.3-ம் நூற்றாண்டு வரை உள்ள சங்க காலத்தை சார்ந்தவை என்றும் மேலும் இந்த தொல்லியல் இடம் இரும்புக்காலம் மற்றும் சங்க காலத்தில் ஓர் ஊரிருக்கை பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிக்கு அருகில் உள்ள காரையூரில் இதே காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொல் பொருட்கள் கிடைத்த இடத்தில் அரசு முறையான தொல்லியல் கள ஆய்வு மற்றும் அகழாய்வு மேற்கொண்டால் மேலும் பல புதிய தொல்லியல் தடயங்களை கண்டறிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Previous Post Next Post