தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காணொளி வாயிலாக பயிற்சி வகுப்பு நடைபெற்றதை மாவட்ட கலெக்டர். க.வீ.முரளீதரன், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக முதலமைச்சர் அவர்கள் (1.3.2022) அன்று தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன்மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய நான் முதல்வன் என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும்.
அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்குபடிக்கலாம், எப்படிப்படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும். தமிழில் தனித்திறன் பெற சிறப்புப்பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப ,பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், தேனி மாவட்டத்திலுள்ள 97 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 11258 மாணவ மாணவியர் 12-ஆம் வகுப்பில் பயின்று வருகின்றனர்.
இவர்களின் மேற்படிப்புக்கு வழிகாட்டவும் வேலைவாய்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் ஏப்ரல் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் முதற்கட்டமாகவும், 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் இரண்டாம் கட்டமாகவும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களின் வழிகாட்டுதல்கள் இணையவழி காணொளியில் பிற்பகல் 02:00 மணி முதல் 04:00 மணி வரை, மாணவர்கள் நேரலையாக காணும் வகையில் ஒளிபரப்பப்படுகிறது. 04:00 மணி முதல் 05:00 மணிவரை மாணவர்கள் இணையவழியில் தனித்தனியாக தங்களுக்குள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், பின்னூட்டத்தினை சமர்ப்பிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்றைய தினம் தேனி-அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் லெட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆகிய பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணைய வழி காணொளி வாயிலாக பயிற்சி வகுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி, மாணவ, மாணவியர்கள் தங்களது தனி திறனுக்கேற்ப கல்வி பயின்றிட வேண்டும். அவ்வப்போது, எழுத்துதிறன், வாசிப்புத்திறனை மேம்படுத்தி தங்களது பெற்றோர்கள் மற்றும் பயிலும் பள்ளிக்கு பெருமை சேர்த்திடும் வகையில் கல்வி பயில வேண்டும் என மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம் மற்றும் ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
-ரா.சிவபாலன் தேனி மாவட்ட செய்தியாளர்