மாலி நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் ரச்சனா சச்தேவா கோர்ஹோனனை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.
இதற்கான ஒப்புதலை செனட் சபை அளிக்க வேண்டும். இவர் தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறையில் துணை உதவிச்செயலாளராகவும், அண்டை கிழக்கு விவகாரங்கள் மற்றும் ஆசிய விவகார பணியக ஒருங்கணைந்த நிர்வாக அலுவலகத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றுகிறார். இவர் சவுதி அரேபியாவில் தரனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முதன்மை அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.
கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நிர்வாகப்பிரிவின் தலைமைப்பொறுப்பையும் வகித்துள்ளார். இந்தியாவில், மும்பையில் அமெரிக்க துணைத்தூதரகத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.
மொராக்கோவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி இராஜதந்திரி புனித் தல்வாரையும், நெதர்லாந்திற்கான தனது தூதராக இந்திய வம்சாவளி அரசியல் ஆர்வலர் ஷெபாலி ரஸ்தான் துக்கலையும் பரிந்துரைக்கும் தனது விருப்பத்தை கடந்த மாதம் ஜனாதிபதி பிடன் அறிவித்தார்.