தூத்துக்குடி மாநகராட்சில் கட்டிட அனுமதி, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட சேவை கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சேவைகளான காலிமனை, சொத்து, தொழில் வரி நிர்ணயம், திட்டம் மற்றும் கட்டிட அனுமதி, குடிநீர் குழாய் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்டவை குறிப்பிட்ட கால அளவுக்குள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சேவைகள் பொதுமக்களுக்கு காலதாமதமாக வழங்கப்படுவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கபடுவதாகவும் புகார்கள் வந்தன. இதனால் பொதுமக்கள் நலன் கருதி மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டு உள்ள சேவைகளுக்கான கால அளவுகள் மற்றும் சேவை கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி காலி மனை வரி, சொத்து வரி, தொழில் வரி எந்தவித கட்டணமும் இன்றி 15 நாட்களுக்கும் நிர்ணயம் செய்யப்படும்.
சொத்து வரி விதிப்பாளர் பெயர் மாற்றம் செய்ய வரிவிதிப்பு 1-க்கு ரூ.100-ம், பாதாள சாக்கடை வைப்புத்தொகை குடியிருப்புக்கு ரூ.4 ஆயிரமும், வணிகத்துக்கு ரூ.8 ஆயிரமும் செலுத்தினால் 15 நாட்களுக்குள் பெயர் மாற்றப்படும். மனைப்பிரிவு அனுமதி பெற, ஒரு ஏக்கர் மற்றும் அதன் பாகம் அனுமதி கட்டணம் ரூ.6 ஆயிரத்து 150-ம், ஒரு சதுர மீட்டர் பரிசீலனை கட்டணம் ரூ.150-ம் செலுத்தினால் 30 நாட்களுக்குள் சேவை வழங்கப்படும்.
கட்டிடம் மற்றும் திட்ட அனுமதி பெற 30 நாட்களுக்குள்ளும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்த 15 நாட்களுக்குள்ளும், பழைய கட்டிடம் இடிப்பதற்கு 15 நாட்களுக்குள்ளும், குடிநீர் குழாய் இணைப்பு 15 நாட்களுக்குள்ளும், குடிநீர் குழாய் தற்காலிகமாக துண்டிப்பு 3 நாட்களிலும், குடிநீர் கசிவு சரி செய்தல் 3 நாட்களிலும், சுகாதார சான்று 7 நாட்களிலும், வணிக நிறுவனங்களுக்கான உரிமையாணை 7 நாட்களிலும், பிறப்பு சான்று பெயர் பதிவு கட்டணம் ரூ.200 செலுத்திய 3 நாட்களிலும், இறப்பு சான்று கட்டணம் ரூ.200 செலுத்திய 3 நாட்களிலும், பிறப்பு, இறப்பு சான்று பெயர் திருத்தம் செய்ய ரூ.250 செலுத்திய 7 நாட்களிலும் சேவை வழங்கப்படும்.
இந்த சேவைகளுக்கான விவரங்கள் குறித்து தொடர்புடைய பிரிவு அலுவலர் மற்றும் பிரிவு தலைமை அலுவலர்களிடம் அலுவலக நேரத்தில் நேரடியாக அணுகலாம். இதற்கான சேவை கட்டணங்களை காட்டிலும் கூடுதலாக பணம் எதுவும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியது இல்லை. பொதுமக்கள் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் மேற்படி சேவைகளுக்கு 3-வது நபரை அணுகுவதை தவிர்த்து சேவைகளுக்கான தொடர்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.