யுகாதி கொண்டாட மினிவேனில் பிதுங்கியபடி சென்ற பொதுமக்கள்... வேன் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாப பலி

 திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே புதூர்நாடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை நெல்லிவாசல் நாடு மலைக்கிராம பகுதியை சேர்ந்த பொதுமக்கள் யுகாதி பண்டிகையை கொண்டாட முடிவு செய்தனர். 

இதையடுத்து அவர்கள் சுமார் 50 பேர் மினி வேன் (சரக்கு வேன்) ஒன்றில் ஏறி கோவிலுக்கு சென்றனர். சேம்பரை அருகே உள்ள ஆஞ்சனேயர் கோவிலுக்கு அவர்கள் மினி வேனில் சென்று கொண்டு இருந்தார்கள். அதில் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் நெருக்கியடித்து ஏறிச்சென்றதாக தெரிகிறது. 

அந்த மினிவேன் புதூர்நாடு பகுதியில் வந்த போது, எதிர்பாராத விதமாக மலைச்சரிவில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்தவர்களும் வேனுடன் சேர்ந்து மலைச்சரிவில் உருண்டனர்.  

இதனால் அங்கு பலருக்கும் படுகாயம் ஏற்ப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் ரத்தவெள்ளத்தில் பொதுமக்கள் குற்றுயிருகும் குலையுமாக ஏராளமானவர்கள் கிடந்தனர்; குழந்தைகள் உள்பட பலர் கதறி அழுதனர். 

அந்த இடத்தில் செல்போன் டவர் கிடைக்காததால் 108 ஆம்புலன்சை தொடர்பு கொள்ள முடியவில்லை. கீழே வந்த சிலர் கூறிய தகவலின் அடிப்படையில் அரை மணி நேரத்துக்கு பின்னரே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிந்தது.  இந்த விபத்தில் 7 பேர் பலியானதாகவும், 10க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

சரக்கு வேனில் அதிக ஆட்களை ஏற்றிச்சென்றதே இவ்வளவு உயிர்சேதத்திற்கு காரணம்; இது போன்ற விதிமீறல்களில் பாரபட்சமற்ற நடவடிக்கை மட்டுமே உயிர்சேதங்களை தவிர்க்கும்.

-கே.வி.குப்பம் சத்யராஜ்


Previous Post Next Post